புனேவில் 22 வயது பெண் ஒருவர் தனது 11 மாத மகனைக் கொன்று, அவனது உடலைக் கிணற்றில் வீசிவிட்டு, எந்தத் தடயமும் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பின்னர், குற்றத்தை மறைத்துக்கொண்டே ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காக அவர் வேறொருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். அந்த சமயத்தில் அந்த பெண்ணினுடைய முன்னாள் கணவர், அவர் மற்றொரு ஆணுடன் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, தன் மகனைத் திருப்பி தன்னிடம் கொடுக்குமாறு கேட்டு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அப்பெண், தனது முன்னாள் கணவரை தவிர்த்ததால், அவர் ஏப்ரல் 5 அன்று ரஞ்சன்காவ்ன் எம்.ஐ.டி.சி காவல் நிலையத்தை அணுகி, காணாமல் போனவர் குறித்துப் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மகாதேவ் வாக்மோட் தலைமையிலான போலீஸ் குழு, அப்பெண்ணை ஷிரூர் தாலுக்காவில் கண்டுபிடித்து கைது செய்தது.
அவரிடம் குழந்தையைப் பற்றி விசாரித்தபோது, தன் வீட்டில் இருந்த சிமெண்ட் மேடையில் இருந்து தவறி விழுந்து குழந்தை இறந்துவிட்டதாக அவர் முதலில் கூறியுள்ளார். பயத்தின் காரணமாக, ஷிரூர் தாலுக்காவில் உள்ள தனது முன்னாள் கணவரின் வீட்டருகே இருந்த கிணற்றில் உடலை வீசியதாகவும் அவர் கூறினார். இது குறித்து காவல்துறை, "நாங்கள் கிணற்றைச் சோதனையிட்டபோது, ஒரு பைக்குள் குழந்தையின் உடலைக் கண்டோம். அது மிதப்பதைத் தடுப்பதற்காக அந்தப் பெண் பைக்குள் கற்களை வைத்திருந்தார்," என்று இன்ஸ்பெக்டர் கூறினார். அப்பெண்ணிடம் நடந்த தொடர் விசாரணையை அடுத்து, மார்ச் 8ம் தேதி தனது மகனின் தலையை சிமெண்ட் மேடையில் அடித்து கொலை செய்ததை அப்பெண் ஒப்புக்கொண்டதாக அதிகாரி, திடுக்கிடும் தகவலைத் தெரிவித்தார். கொலை செய்த பின்னர், குழந்தையின் உடலை பையில் வைத்து அதில் கற்களை நிரப்பி கிணற்றில் வீசியுள்ளார்.
மேலும், "அந்த பெண், தன் கணவனை விட்டுப் பிரிந்து மறுமணம் செய்ய விரும்பியுள்ளார். தனது இரண்டாவது திருமணத்திற்கு மகன் ஒரு தடையாக இருப்பான் என்று நினைத்ததால், அப்பெண் குழந்தையை கொன்றுள்ளார்", என்று அதிகாரி கூறினார். சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, அந்தப் பெண் தனது கணவர் மற்றும் மகனுடன் கொங்கனுக்கு சுற்றுலா சென்றுள்ளார். பயணம் முழுவதும் குழந்தை அழுததால் அவர் விரக்தியடைந்துள்ளார். வீடு திரும்பிய பிறகு, தன் கணவர் தங்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்வார் என்று அப்பெண் எதிர்பார்த்த நிலையில், அவர் அதற்குப் பதிலாக ஒரு திருமணத்திற்குச் சென்றிருக்கிறார். இதனால் கோபமடைந்த அப்பெண், குழந்தையைக் கொன்றதாகக் கூறப்படுகிறது," என்று அவர் மேலும் கூறினார். பின்னர் அப்பெண் தன் வீட்டிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு கிளம்பியுள்ளார். "அவர் முதலில் ஷிரூருக்குச் சென்று ஒரு புதிய கைபேசியை வாங்கியுள்ளார். பிறகு, தனக்கு ஒரு மகன் இருப்பதை தெரிவிக்காமல், ஒரு திருமண முகவர் மூலம் மறுமணம் செய்துகொண்டுள்ளார் ," என்று அதிகாரி கூறினார். அதிகாரியின் கூற்றுப்படி, அப்பெண்ணின் முதல் கணவர் ஏப்ரல் 3 ஆம் தேதி அவரது புதிய கணவரைத் தொடர்புகொண்டு, "குழந்தையைத் திருப்பிக் கொடுத்த பின்னரே அப்பெண்ணை உங்களுடன் தங்க அனுமதிப்பேன்" என்று கூறியுள்ளார். அதன் பின்பு, "தன் குழந்தைக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் விபத்து குறித்து அந்தப் பெண் திருமண முகவரிடம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அந்த முகவர் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார். மேலும், அவரது முன்னாள் கணவரும் அப்பெண்ணின் மீது புகார் அளித்தார்," என்றும் அதிகாரி கூறினார். தற்போது, அந்தப் பெண் மீது பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின் 103 (கொலை) மற்றும் 23 (குற்றத்திற்கான ஆதாரங்களை மறைத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.