உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் சினிமா பட பாணியில் அரங்கேறியுள்ள ஒரு மோசடி சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது. பொதுவாக திருமண மோசடிகளில் "ஓடிப்போகும் மணப்பெண்களை" பற்றித்தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இங்கே ஒரு நபர் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் மூன்று பெண்களைத் திருமணம் செய்து, அவர்கள் ஒவ்வொருவரிடமும் வரதட்சணை மற்றும் நகைகளைப் பறித்துக்கொண்டு வீட்டை விட்டுத் துரத்தியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அந்த நபர் நான்காவது திருமணத்திற்குத் தயாராகி வந்த நிலையில், பாதிக்கப்பட்ட மூன்று மனைவிகளும் ஒன்று திரண்டு காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த மோசடி வழக்கின் நாயகன் லலித்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுனில் குமார். இவரது தந்தை ரயில்வே துறையில் கேங்மேனாகப் பணியாற்றி வருகிறார். சுனில் குமாருக்கு முறையான வேலை எதுவும் இல்லாத நிலையிலும், தனது திருமணப் பேச்சுகளின் போது உண்மைகளை மறைத்து ஜான்சி மற்றும் லலித்பூர் பகுதிகளைச் சேர்ந்த மூன்று பெண்களை அடுத்தடுத்துத் திருமணம் செய்துள்ளார். ஒவ்வொரு திருமணத்தின் போதும் தான் ஏற்கனவே திருமணமானவர் என்ற உண்மையை மிகச் சரியாக மறைத்து இந்த மோசடியைச் செய்துள்ளார். தற்போது பாதிக்கப்பட்ட மூன்று பெண்களும் ஜான்சி எஸ்பி அலுவலகத்திற்கு நேரில் வந்து, சுனில் குமார் தங்களை எப்படி ஏமாற்றினார் என்பது குறித்துப் புகார் அளித்துள்ளனர்.
சுனில் குமாரின் முதல் திருமணம் கடந்த 2019-ஆம் ஆண்டு இந்து முறைப்படி நடைபெற்றது. இந்தத் திருமணத்திற்காகப் பெண்ணின் வீட்டார் சுமார் 8 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். இதில் 5 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும், மீதித் தொகைக்கு நகைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே சுனில் கூடுதல் வரதட்சணை கேட்டுத் தொந்தரவு செய்யத் தொடங்கியுள்ளார். பெண்ணின் வீட்டார் அதற்கு மறுக்கவே, தனது முதல் மனைவியைப் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு அவரிடமிருந்து விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
முதல் மனைவியின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருந்தபோதே, கடந்த 2021-ஆம் ஆண்டு சுனிலின் தந்தை அவருக்கு இரண்டாவது திருமணத்தை ஏற்பாடு செய்துள்ளார். அண்டை கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் குடும்பத்தினரும் சுமார் 8 லட்சம் ரூபாய் வரை வரதட்சணை கொடுத்துள்ளனர். சுனிலுக்கு ஏற்கனவே திருமணமான விஷயம் அவர்களுக்குத் தெரியாது. திருமணமான சில மாதங்களிலேயே தங்கச் சங்கிலி மற்றும் 'புல்லட்' மோட்டார் சைக்கிள் கேட்டு அந்தப் பெண்ணைச் சித்திரவதை செய்துள்ளார் சுனில். அதற்கு அந்தப் பெண் மறுக்கவே, அவரை அடித்துத் துன்புறுத்தி வீட்டை விட்டுத் துரத்தியுள்ளார். திருமணத்திற்குப் பிறகுதான் தனக்கு முன்பே ஒரு அக்கா (முதல் மனைவி) இருப்பதே தனக்குத் தெரியும் என்று இரண்டாவது மனைவி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
மோசடி இத்துடன் நிற்கவில்லை. கடந்த 2023-ஆம் ஆண்டு மூன்றாவது பெண்ணை வளைத்துப் பிடித்துள்ளார் சுனில். அந்தப் பெண்ணின் குடும்பத்தாரும் தங்களால் இயன்ற அளவு 8 லட்சம் ரூபாய் மற்றும் நகைகளைச் செலவு செய்துள்ளனர். அந்தப் பெண் மூன்று மாதக் கர்ப்பிணியாக இருந்தபோது, மீண்டும் அதே வரதட்சணை கொடுமை அரங்கேறியுள்ளது. சுனில் அவரைத் தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். தற்போது அந்தப் பெண்ணிற்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தனக்கு முன்னால் இன்னும் இரண்டு மனைவிகள் இருப்பதை அறிந்த அந்தப் பெண், மற்ற இருவருடன் இணைந்து தற்போது நீதிக்காகப் போராடி வருகிறார்.
பாதிக்கப்பட்ட மூன்று பெண்களும் ஒரே நேரத்தில் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்த சம்பவம் அதிகாரிகளையே திகைக்க வைத்துள்ளது. இது குறித்துப் பேசிய ஜான்சி பாபினா காவல் நிலையப் பொறுப்பாளர் ஜே.பி. பால், பெண்களின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், தலைமறைவாக உள்ள சுனில் குமார் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் உறுதி அளித்துள்ளார். வரதட்சணை ஆசைக்காகப் பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த இந்த "கில்லாடி" மாப்பிள்ளையின் கதை அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.