பள்ளி கழிவறையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமையா? நாடகம் என கூறும் போலீஸ்.. ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள்!

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென கழிவறைக்குள் புகுந்து தனது வாயை பொத்தியதாகவும்...
chengalpattu pocso case
Published on: 
Updated on: 
2 min read

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் - கேளம்பாக்கம் பிரதான சாலையில் கண்டிகை பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 10ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், நேற்று நண்பகல் பள்ளியின் பின்புறம் உள்ள பெண்கள் கழிவறைக்கு சென்றுள்ளார். வெகுநேரம் ஆகியும் வராத நிலையில் மற்றொரு மாணவி கழிவறைக்குச் சென்றபோது, அந்த மாணவி மயங்கிய நிலையில் மயங்கி விழுந்து கிடந்துள்ளார். அதை பார்த்த பயந்து போன மாணவி பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்த பெண் ஆசிரியர்கள் கழிவறைக்குச் சென்று மயங்கிய நிலையில் கிடந்த மாணவியை மீட்டனர். பின்னர் அவரது பெற்றோருக்கும், தாழம்பூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக மாணவியை அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு மாணவி அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து போலீசார் மூன்று தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தனிப்படையினர் மாணவியிடம் நடத்திய விசாரணையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென கழிவறைக்குள் புகுந்து தனது வாயை பொத்தியதாகவும், இதனால் தான் மயங்கி விழுந்ததாகவும், அதன் பின்னர் என்ன நடந்தது என்பது தனக்குத் தெரியவில்லை என்றும் மாணவி கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாணவியைத் தாக்கியது யார்? மேலும், மாணவிக்கு பாலியல் வன்கொடுமை ஏதேனும் நடந்ததா? என்பது குறித்து தாழம்பூர் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். பள்ளி வளாகத்தில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியிடம் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவினரும் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், மாணவி கூறிய சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மர்ம நபர் தாக்கியதாக மாணவி கூறியது பொய் என்றும் அவர் நாடகமாடியதாகவும் என தெரியவந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் அண்மையில் நடைபெற்ற தேர்வில் மாணவி கணிதப் பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்றதாகவும், இதனால் நேற்று மீண்டும் அதே பாடத்துக்கு தேர்வு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்தத் தேர்வை எழுதுவதற்கு பயந்த மாணவி, தேர்வில் இருந்து தப்பிப்பதற்காக இவ்வாறு நாடகமாடியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, பள்ளியின் பின்புறம் உள்ள பெண்கள் கழிவறைக்கு அருகில் பள்ளியின் மதில் சுவர் அமைந்துள்ளதாகவும், அந்த மதில் சுவரை ஒட்டி பின்புறத்தில் ஏரிக்கரை இருப்பதால், சுவரை எளிதாகத் தாண்டி பள்ளி வளாகத்திற்குள் நுழைய அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், பள்ளியின் மதில் சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறையிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, மாணவி மர்ம நபரால் தாக்கப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் பரவிய தகவலால் அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது போலீஸ் விசாரணையில் மாணவி கூறியது நாடகம் எனத் தெரியவந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவியின் பெற்றோர்கள் சக மாணவர்களின் பெற்றோர் பள்ளி முன்புள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று சம்பவம் தொடர்பான தகவல்கள் பரவிய நிலையில், தற்போது பெற்றோர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com