“ரூ.20 கோடி வாங்கிக் கொடுங்க..” - ஜெம் வீரமணி விவகாரத்தில் ஜான் பாண்டியன் பகீர் தகவல்! கட்டப்பஞ்சாயத்து நடந்ததா?

குடும்ப பிரச்சினை எனக்கூறி சாந்தியையும் ஒரு நாள் ஹோட்டலுக்கு அழைத்து வந்தார்...
gem veeramani
Published on: 
Updated on: 
2 min read

சென்னையில் சிறுமிகளை வீட்டில் தங்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில், ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த வழக்கில், சாந்தி என்ற பெண் உள்பட இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஜெம் வீரமணிக்கு ஆதரவாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என பலர் உதவி செய்ததாகவும், அதற்காக பல கோடி ரூபாய் பணம் கைமாறியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரஞ்சன்குமார் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், 'ஜெம் வீரமணி விவகாரத்தில், தன்னையும் வழக்கில் கைதாகியுள்ள சாந்தி என்ற பெண்ணையும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் மிரட்டினார்' என குறிப்பிட்டிருந்தார். அதாவது இந்த வழக்கில் ஜெம் வீரமணிக்கு ஆதரவாக ஜான்பாண்டியன் செயல்பட்டதாக ரஞ்சன் குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக, காவல் ஆணையர் அலுவலகத்திலும்  காங்கிரஸ் கட்சியின் எஸ்சி, எஸ்டி பிரிவு நிர்வாகி ரஞ்சன் குமார் புகார் அளித்திருந்தார். மேலும் இவர், 2024 ஆம் ஆண்டே இந்த சம்பவத்தை அறிந்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த அறிக்கைக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் விளக்கம் கொடுத்துள்ளார். திருநெல்வேலியில் அளித்த பேட்டியில், “வீரமணி சம்பவத்திற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை” என்றும் “ரஞ்சன் குமார் ஒரு அரசியல் தலைவர் மூலமாக என்னை வந்து சந்தித்தார்.. குடும்ப பிரச்சினை எனக்கூறி சாந்தியையும் ஒரு நாள் ஹோட்டலுக்கு அழைத்து வந்தார்” என்று தெரிவித்தார். மேலும்  குடும்பப் பிரச்சனை வீரமணியிடம் பணம் நிறைய இருக்கிறது 20 கோடி ரூபாய் அவரிடம் வாங்கி கொடுங்க என அவர்கள் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். “அதற்கு நான் உடன்படவில்லை அதோடு அவர்களுடன் ஆன சந்திப்பு முடிந்து விட்டது.. தற்போது எனது பெயரை ஏன் இழுக்கிறார்கள் என தெரியவில்லை? என்றும் குறிப்பிட்டார்.

நான் மிரட்டினேன் என கூறும் ரஞ்சன் குமார் அப்போதே காவல் நிலையத்தில் ஏன் புகார் அளிக்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பணம் பறிக்க நினைத்தவர்கள் ரஞ்சன் குமாரும் சாந்தியுமே என்று குற்றச்சாட்டிய ஜான் பாண்டியன் “புதிய தமிழகம் கட்சியினர் எனது பெயரை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இது போன்ற நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகிறார்கள்” என்றும் தெரிவித்தார். “காவல்துறை என்னிடம் எதுவும் கேட்கவில்லை. நானும் காவல்துறை அதிகாரிகளை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. என் கை சுத்தமாக இருக்கிறது. எனது பெயரைக் கொடுக்கும் நோக்கில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் சைபர் கிரைம் போலீஸிடம் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்கள்.. போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன். சிறு குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை கடுமையான குற்றச் செயல் அது மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருநெல்வேலியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் கேட்டுக்கொண்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com