

அசாம் மாநிலத்தில் ஜோர்ஹட் மாவட்டத்தில் பக்கத்துக்கு வீட்டுக்காரரின் மனைவியுடன் தொடர்பில் இருந்த 31 வயது இளைஞர் ஒருவரை தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்த சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காவல்துறையின் தகவல்படி, செப்டம்பர் 7-ம் தேதி அனில் காணாமல் போனதை அடுத்து, அவரது குடும்பத்தினர் மரியானி காவல் நிலையத்தை அணுகியுள்ளனர். அதன் பின்னர்தான் காவல்துறை, போக்தோய் ஆற்றுக்கு அருகிலுள்ள ஆற்றங்கரைப் பகுதியில் இருந்து அனிலின் அழுகிய உடலை மீட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவரின் கழுத்து கத்தியால் அறுக்கப்பட்டு, பின்னர் அரிவாளால் துண்டிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் கபில் கர்மாகர், அவரது மனைவி அனிமா கர்மாகர், கபிலின் இளைய சகோதரர் சஞ்சித் கர்மாகர் மற்றும் அவர்களது நண்பர் மகேஷ் ராஜ்கர் என காவல்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மரியானியின் துணை காவல் கண்காணிப்பாளர் திரிநயன் சாமுவாவின் கூற்றுப்படி, அனில் பல மாதங்களாக அனிமாவுடன் தொடர்ந்து திருமணத்திற்கு மீறிய தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில், செப்டம்பர் 7-ம் தேதி, அனிமா ஒரு தேயிலைத் தோட்டப் பகுதிக்கு அனிலை அழைத்ததாகவும், அங்கு அவரது கணவரும் மற்ற இரண்டு குற்றவாளிகளும் அனிலை கொலை செய்ய காத்திருந்ததாகவும் காவல்துறை தரப்பில் இருந்து கூறப்படுகிறது. அனிமா, அனிலை வரச்சொல்லி அவரை கத்தியால் தாக்கியதாகவும், அதன் பிறகு மற்ற மூன்று குற்றவாளிகள், அனிமாவுடன் சேர்ந்து அவரைக் கொலை செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்திற்கு பின்னர், சடலத்தை ஒரு சாக்கில் வைத்து, ஆற்றங்கரைக்கு இழுத்துச் சென்று புதைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டிலிருந்தே போலீசார் கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை மீட்டதாகவும் காவல்துறை கூறியுள்ளனர்.
இதனையடுத்து கொலை, குற்றச் சதி மற்றும் ஆதாரங்களை மறைத்தல் உள்ளிட்ட பிஎன்எஸ் தொடர்புடைய பிரிவுகளின் கீழ், குற்றம் சாட்டப்பட்ட நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக காவல்துறை தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இதனையடுத்து, அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பின்னர் போலீசாரால் குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் இதுகுறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்