உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மஹந்த் மற்றும் அவரது மனைவி பாலா தேவி ஆகியோரின் இளைய மகனான அமித், வியாழக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் தனது குடும்பத்தின் பண்ணைக்கு அருகில் வைக்கோல் சேகரித்துக் கொண்டிருந்தபோது விஷப்பாம்பு கண்டித்துள்ளது. அச்சிறுவன் மூன்று மணி நேரம் வயலில் வேலை செய்த பிறகு வீட்டிற்குத் திரும்பி, நடந்ததை தனது குடும்பத்தினரிடம் கூறினான். சிறிது நேரத்திலேயே, அவன் சுயநினைவை இழந்துள்ளான்.
அமித்தை உள்ளூர் சமூக சுகாதார மையத்திற்கு (CHC) அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, அவரது குடும்பத்தினர் மூடநம்பிக்கையை நாடியுள்ளனர். அவர்கள் முதலில் அவரை சம்பலில் உள்ள கர்தக்ரானி கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர், அங்கு ஒரு மாந்திரீகர் பேயோட்டும் சடங்கைச் செய்தார். ஆனாலும் சிறுவனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றம் ஏற்படாததால், மேலதிக சடங்குகளுக்காக அவரை சம்பலின் சிர்சா பகுதியில் உள்ள இரண்டாவது இடத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த இடைவெளியில், பாம்பு விஷம் அவரது உடல் முழுவதும் தொடர்ந்து பரவத்தொடங்கியது. கங்கை நதி நீர் பாம்பு விஷத்தை முறியடிக்கும் என்ற மூடநம்பிக்கையைத் தொடர்ந்து, அந்தக் குடும்பத்தினர் ஒரு மரச்சட்டத்தை உருவாக்கி, அதில் அமித்தைக் கட்டி, வெள்ளிக்கிழமை காலை சுமார் 9 மணியளவில் அச்சிறுவனை ஆற்றில் மிதக்கவிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 12 மணி நேரம் தண்ணீரில் கட்டப்பட்ட நிலையிலேயே அமித் இருந்துள்ளான். அதன்பிறகு, அவனது உடல்நிலை மேலும் மோசமடைந்து கொண்டே இருந்ததால், அந்தக் குடும்பத்தினர் அவனை புலந்தஷாஹரில் உள்ள சியானா என்ற இடத்தில் இருந்த ஒரு பாரம்பரிய ஹக்கீமிடம் அழைத்துச் சென்றனர். சனிக்கிழமை மதியம், சிறுவன் இறந்துவிட்டான் என்று கூறி, அவர்கள் அம்ரோஹாவுக்குத் திரும்பி, பிற்பகல் சுமார் 2 மணியளவில் அவனைக் கங்கையில் கரைத்துள்ளனர்.
இதில் அதிர்ச்சியளிக்கும் செயல் என்னவென்றால், அமித்தின் தாய் பாலா தேவி, தங்கள் குடும்பத்தின் செயல்களை நியாயப்படுத்தினார். "நாங்கள் எங்கள் மகன் அமித்தை மூன்று நாட்களாகச் சுமந்து கொண்டிருக்கிறோம்," என்று அவர் கூறினார். "எங்கள் முன்னோர்கள் காலத்திலிருந்தே இது நடந்து வருகிறது. நாங்களும் அதையே செய்தோம். குழந்தையிடம் எதுவும் மிச்சமில்லாதபோது மருத்துவர்களால் என்ன செய்ய முடியும்?" என்று அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து, ரஹ்ரா சமூக சுகாதார மையத்தின் பொறுப்பாளரான டாக்டர் ஷஷாங்க் சௌத்ரி, அக்குடும்பத்தினர் சிறுவனை எந்தவொரு அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லவில்லை என்று கூறினார். பாம்புக்கடி அல்லது வேறு ஏதேனும் விலங்குக்கடி ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பட்சத்தில், முறையான பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுவதற்காக, மக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் செல்லுமாறு வலியுறுத்தி, சுகாதாரப் பணியாளர்கள் அப்பகுதியில் தொடர்ந்து விழிப்புணர்வுச் செய்திகளைப் பரப்பி வருவதாக அவர் கூறினார். இருப்பினும், மூடநம்பிக்கையால் ஒரு குழந்தையின் உயிர் பிரிந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.