

இந்தியா என்னதான் வளமான ஒரு நாடாகவும் உலக அளவில் வலிமையான ராணுவத்தை கொண்டிருந்தாலும், இந்தியாவின் மிகப்பெரிய இழுக்குகளில் ஒன்று சாதிய கொடுமை. ஒவ்வொரு நாட்டிலும் எளியோரை வலிமை படைத்தோர் நசுக்கி அவர்களின் உழைப்பை சுரண்டும் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்த ஏற்றத்தாழ்வை போக்கத்தான் ஜனநாயகம் அவசியம் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற போக்குதான் சரியானது. ஆனால் இந்தியா தன்னை ஜனநாயகமான ஒரு நாடாக அறிவித்துக்கொண்டாலும் இந்தியா ஜனநாயக நாடு கிடையாது. சமூகத்தில் சமத்துவம் உருவாகாத நாடு தன்னை ஒருபோதும் ஜனநாயக நாடு என்று அழைத்துக்கொள்ள முடியாது. ஒருவேளை அப்படி ஒரு நாடு தன்னை அறிவித்துக்கொண்டால் அது மிகப்பெரும் ஒரு முரண்.
இந்தியா 77 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த முரணிலேயே தான் தொடர்ந்து வருகிறது. 77 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இன்னமும் மாறாமல் இருக்கக்கூடிய அவலம் பிறப்பால் உயர்வுதாழ்வு கருதுவது.
ஆனால் எல்லாவித ஏற்றத்தாழ்வுகளையும் உடைக்க கூடிய வல்லமை காதல் ஒன்றுக்குத்தான் இருக்கிறது, நிறம், மதம், இனம் மொழி என எந்த தடைகளும் அன்பு கொண்ட நெஞ்சத்திற்கு தெரியாது. ஆனால் அந்த காதலை கைக்கொள்ள முயலும் ஒவ்வொருவரும் சமூகத்தின் முன் குற்றவாளியாக்கப்படுகின்றனர் இல்லையெனில் கொல்லப்படுகின்றனர். எத்தனை விதமான படுகொலைகளை நாம் பார்த்திருப்போம். பெற்ற பிள்ளைகளை கொள்ளும் அளவிற்கு சாதி ஊறிப்போன ஒரு சமூகம்தான் இந்திய சமூகம்.
தினம் தினம் ஏதேனும் ஒரு சாதிய படுகொலை சம்பவம் நடந்தவண்ணமே உள்ளது. இன்று மீண்டும் சாதி விவகாரத்தால் ஒரு சாதிய படுகொலை சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஓட ஓட இளைஞர் வெட்டி படுகொலை.அரிவாளால் வெட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுடலை முத்து(29). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த, சுந்தர் என்பவர் காந்திநகர் பகுதிக்கு வந்து சாதி பெயரை சொல்லி அங்கிருந்தவர்களை இழிவாக பேசியுள்ளார். அப்போது அங்கிருந்த சுடலைமுத்து அதை தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது.
இந்த சூழலில் ஆத்திரத்திலே இருந்த சுந்தர் மற்றொரு நபருடன் மறு நாள் காலை 11 மணிக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது காந்திநகர் பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த சுடலைமுத்துவை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். உயிருக்கு பயந்து ஓடிய சுடலை முத்து என்பவரை சுந்தர் மற்றும் அவருடன் வந்த நபரும் சாதிப் பெயரை சொல்லி விரட்டி ஓட ஓட வெட்டி படுகொலை செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தான்குளம் காவல்துறையினர் உடலை கைப்பற்ற முயற்சி செய்தனர், அப்பொழுது ஊர்மக்கள் காவல்துறையினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்பு சுடலைமுத்து உடலை சாத்தான்குல அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி தப்பி ஓடிய இருவரையும் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.