“நீ கெத்தா நான் கெத்தா” - கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த கோஷ்டி மோதல்.. நடுரோட்டில் துரத்தி துரத்தி வெட்டப்பட்ட பயங்கரம்!
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதான ஹரிஷ் குமார். இவர் பல்லாவரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் விஸ்காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் ஹரிஷ் பல்லாவரம் பகுதியில் உள்ள கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது நான்கு இருசக்கர வாகனத்தில் வந்த எட்டுக்கும் மேற்பட்ட நபர்கள் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு கத்தியால் ஹரிஷை வெட்ட வந்துள்ளனர் .
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹரிஷ் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார். இருப்பினும் ஹரிஷை விடாமல் துரத்திய அந்த கும்பல் மடக்கி பிடித்து அவற்றின் கையில் வெட்டி உள்ளது. தப்பிக்க ஹரிஷ் ஓடும்போது அந்த கும்பல் ஓட ஓட ஹரிசின் கால், தலை, கை உள்ளிட்ட பகுதியில் வெட்டியதில் மாணவரின் சுண்டவிரல் துண்டாகி உள்ளது.
தொடர்ந்து அந்த கும்பல் வெட்டியதில் உடலின் நான்குக்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக்காயம் விழுந்ததால் ஹரிஷ் கீழே விழுந்து ரத்தவெள்ளத்தில் மிதந்துள்ளார். இதனை பார்த்த அந்த பகுதியில் வந்த சக மாணவர்கள் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போது மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அருகே தனியார் மருத்துவமனைக்கு மாணவனை அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இரு கோஷ்டி மோதலால் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மாணவர்கள் குவிந்து வருகின்றனர். இதனை அறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த பல்லாவரம் போலீசார் ஹரிஷுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இரண்டு மாணவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.முதல் கட்ட விசாரணையில் மூன்றாம் ஆண்டு படிக்கும் அன்பு என்பவர் வெளி ஆட்களை வைத்து மாணவனை வெட்டியதாக உடன் வந்த மாணவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
அதுமட்டுமில்லாமல் கல்லூரியில் “நீ கெத்தா நான் கெத்தா” என அடிக்கடி இரண்டு கும்பல்களுக்கு இடையே வாக்குவாதம் நடைபெற்று வந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். நடுரோட்டில் மாணவன் துரத்தி துரத்தி வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.