“5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை” - வீட்டில் சொன்னால் பேயை அனுப்புவதாக மிரட்டிய ஓட்டுநர்.. புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீஸ்?

புகார் அளித்தும் இன்னும் குற்றவாளியை கைது செய்யவில்லை என சொல்லப்படுகிறது...
Chengunram POCSO Case
Chengunram POCSO Case
Published on: 
Updated on: 
1 min read

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில், 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பள்ளி வேன் ஓட்டுநர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செங்குன்றம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் 5 வயது சிறுமி யுகேஜி படித்து வருகிறார். இந்நிலையில், சிறுமியின் பிறந்தநாளன்று அவர் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது சிறுமி சோர்வாக இருந்ததைக் கவனித்த பெற்றோர், அவரிடம் என்ன நடந்தது என விசாரித்துள்ளனர்.

அப்போது, பள்ளி வேன் ஓட்டுநர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து வீட்டில் யாரிடமாவது தெரிவித்தால், வீட்டுக்குப் பேயை அனுப்பிவிடுவேன் எனக் கூறி ஓட்டுநர் மிரட்டியதாகவும் சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சம்பவம் தொடர்பாக உடனடியாக செங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், புகார் அளித்தும் இன்னும் குற்றவாளியை கைது செய்யவில்லை என சொல்லப்படுகிறது.

எனவே உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் செங்குன்றம் - திருவள்ளூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் வேன் ஓட்டுநரைப் பொதுமக்களே பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், சம்பவம் தொடர்பாகப் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வேன் ஓட்டுநர் ஷியாமைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர். இந்தச் சாலை மறியல் காரணமாகச் செங்குன்றம் - திருவள்ளூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்