
சென்னை அடுத்த விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 37 வயதான தொழிலதிபர் முரளி. இவர் கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார் இவருக்கு முகநூல் மூலம் ஒரு பிரெண்ட்ஸ் ரிக்வட்ஸ் வந்துள்ளது அதில் பூஜா என்கிற பெயரில் தொடர்பு கொண்ட பெண் முதலில் முரளியிடம் தொழில் குறித்து பேசுவது போல தொடக்கி பின்னர் தொடர்ந்து பேசி நட்பாக பழகி வந்துள்ளார். நாளடைவில் ஆசை வார்த்தைகளை கூறி நேரில் உங்களை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பி சென்ற முரளி அந்த பெண்ணுடன் சேர்ந்து விருகம்பாக்கம் பகுதியில் உள்ள உணவகத்துக்கு சென்று இருவரும் உணவருந்தி உள்ளனர்.
பின்னர் அதே பகுதியில் ஹோட்டலில் ரூம் புக் செய்து முரளி மற்றும் அந்த பெண் தனிமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அறையின் உள்ளே நுழைந்த மூன்று நபர்கள் முரளியை அடித்து “என் மனைவியுடன் இருப்பதற்கு நீ யார்” என கேட்டு தகராறு ஈடுபட்டனர். உடனடியாக பயந்து போன முரளி எதுவாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம் என அவர்களை அழைத்துக் கொண்டு ஓட்டலில் இருந்து வெளியே வந்த போது அவருடைய காரிலேயே ஏற்றி கடத்தி சென்றுள்ளனர்.
மகாபலிபுரம் வரை சென்று அங்கு ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி முரளியை தாக்கி கையில் இருந்த பணம் மற்றும் நகையை பறித்துக் கொண்டு பின்னர் நாங்கள் கேட்கும் போது எங்களுக்கு 3 லட்சம் ரொக்க பணம் அளிக்க வேண்டும் என கேட்டு சித்ரவதை செய்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசில் தெரிவித்தால் உன்னை கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு மூவரும் அந்த இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளனர். உயிரை காப்பாற்றிக் கொண்டால் போதும் என அங்கிருந்து தப்பியோடி வந்த முரளி அரும்பாக்கம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட உதவி ஆணையாளர் ரமேஷ் மற்றும் காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் ஒரு தனிப்படை அமைத்து சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட பணம் யாருடைய வங்கி கணக்கில் அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரணை செய்த போது அவர்கள் அளித்த தகவலின் பேரில் விருகம்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த ஹனி ட்ராப் கும்பலின் தலைவன் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் பூபாலன் சுந்தரமூர்த்தி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் கொரோனா காலகட்டத்தில் இருந்து மூன்று பேரும் நண்பர்களாக பழகி வந்ததும் அப்போது பழக்கமான சினேகா என்ற பெண்மணி அவர்களுடன் நட்பு ரீதியாக பழகி வருவதாகவும் அடிக்கடி மது அருந்தும் அளவிற்கு பழக்கம் ஏற்பட்டு இருந்ததால் திட்டம் தீட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் இது போன்று போலியாக முகநூலில் கணக்கு தொடங்கி ஒரு கணக்கை தொடர்பு கொண்டு அவரிடம் ஆசை வார்த்தைகளை பேசி நேரில் வரவழைத்து வலையில் விழ வைத்து பணம் பறிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
அப்போது தான் முரளி கார்களை விற்பனை செய்வதற்காக விளம்பரங்களை முகநூலில் பதிவிட்டு இருந்தார், எனவே அவரிடம் பணம் இருப்பதை அறிந்து அவரை கடத்தி சென்று கொள்ளை அடிக்க முடிவு செய்து என் மனைவி தான் சினேகா என கூறி கார்த்திக் சண்டையிட்டு கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து கார்த்திக் சுந்தரமூர்த்தி பூபாலன் மற்றும் சினேகா ஆகிய நான்கு பேர் மீதும் கடத்தல் வழக்கு பதிவு செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.