
சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் பாஸ்கர்,வரலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு 26 வயதில் நித்யா என்ற மகளும், 25 வயதில் தமிழ் செல்வன் என்ற மகனும் உள்ளனர். நித்யா அம்பத்தூரில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிவதாக கூறி கடந்த இரண்டரை வருடங்களாக வீட்டில் தங்காமல் தனியாக அறை எடுத்து தங்கி வந்துள்ளார். நித்யாவிற்கு கொடுங்கையூரில் உள்ள பாலமுருகன் என்பவருடன் காதல் ஏற்பட்டு இருவரும் கடந்த இரண்டு மாதங்களாக லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்துள்ளனர்.
நித்யாவின் உயிரிழப்பு
இந்நிலையில் நேற்று நித்யா பாலமுருகன் இடம் இன்று தனது பெற்றோர்கள் வீட்டிற்கு வர இருப்பதால் நீ வீட்டில் இருக்க வேண்டாம். என சொல்லி வெளியில் அனுப்பியுள்ளார். மாலை நேரம் ஆனதால் பாலமுருகன் வீட்டிற்கு செல்ல நித்யாவிற்கு போன் செய்துள்ளார். எத்தனை முறை செய்தும் நித்யா போன் எடுக்காததால் பாலமுருகன் நேரில் சென்று பார்த்துள்ளார். அப்போது நித்யா மாத்திரைகைளை உண்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருந்துள்ளார். அவரது உடல் அருகில் அதிக தூக்க மாத்திரைகள் சிதறி கிடந்துள்ளது. இதனை பார்த்த பாலமுருகன் உடனடியாக நித்யாவை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். நித்யாவை பரிசோதித்த மருத்துவர்களை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
போலீஸ் விசாரணை
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் நித்யாவின் உடலை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். முதற்கட்டமாக நித்யாவின் பெற்றோர்களை விசாரித்ததில் நித்யாவிடம் இருந்த 25 சவரன் நகை காணாமல் போனது தெரியவந்துள்ளது. பின்னர் விசாரணை தீவிரப்படுத்திய போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆராய தொடங்கியுள்ளனர். அதில் தற்கொலை செய்து கொண்ட அன்று நித்யாவின் வீட்டிற்கு சந்தோஷ் என்பவர் வந்து போவதை அறிந்த போலீசார் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. நித்யா ஐடி ஊழியர் இல்லை என்பதும் அவர் மேக் ஆர்டிஸ்டாக இருந்து கொண்டு அனைவரிடமும் ஐடி ஊழியர் என்று கூறி ஏமாற்றி வந்ததும். ஆடம்பர வாழ்க்கைக்காக ஆண்களுடன் பழகி பணம் பறித்து வந்ததும் இது போல நித்யாவின் வலையில் சிக்கியவர் தான் டாக்டரான சந்தோஷ் என்பதும் தெரியவந்துள்ளது.
சந்தோஷின் வாக்கு மூலம்
சந்தோஷ் அளித்த வாக்குமூலத்தில் “எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரின் திருமணத்தில் தான் எனக்கு நித்யா அறிமுகமானார். அவரை எனக்கு பிடித்திருந்ததால் அவரிடம் நம்பர் வாங்கி இருவரும் பேச தொடங்கினோம். பின்னர் காதலித்து சிறிது காலம் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்த நிலையில் நித்யாவிற்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்தார்.
இந்த சூழலில் அவரை பிடிக்கவில்லை என்று மீண்டும் என்னுடன் வாழ வந்த நிலையில் எனக்கு பிடிக்கவில்லை என நான் கூறிவிட்டேன். இதனால் நாங்கள் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை எனது வீட்டிற்கு அனுப்பி விடுவேன் என மிரட்டி என்னிடம் இருந்து பணத்தை பறித்துக் கொண்டார். மேலும் மாத மாதம் எனது சம்பள தொகையிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை அவருக்கு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். எனக்கு கல்யாணம் ஆனாலும் இதே போல நடந்து கொள்வேன் என மிரட்டினார்.
இதனால் ஆத்திரமடைந்த நான் நித்யாவை கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்து அன்று இரவு அவருடன் தனிமையில் இருந்து விட்டு அவருக்கு ஓட்காவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்தேன். நித்யா மயக்கம் அடைந்ததும் அவரை முகத்தில் தலையணை வைத்து அமுக்கி கொலை செய்துவிட்டு அவரது லாக்கரில் இருந்த 25 சவரன் நகையை எடுத்து கொண்டு எனது வீட்டிற்கு சென்று விட்டேன். நகைகள் என்னிடம் இருந்தால் மாட்டிக் கொள்வேன் என நினைத்து நகைகளை துணிகளால் மறைத்து கட்டை பையில் போட்டு எனது எதிர் வீட்டு நண்பரிடம் கொடுத்துவிட்டேன்” என கூறியுள்ளார்.
இந்நிலையில் சந்தோஷை கைது செய்த காவல் துறையினர். அவரிடமிருந்த 25 சவரன் நகைகளை மீட்டு சந்தோஷின் நண்பருக்கும் இந்த கொலையில் சம்மந்தம் உள்ளதா என்ற கோணத்தில் அவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.