“பட்டப்பகலில் கொல்லப்பட்ட தூய்மை பணியாளர் ” - நிறுவனத்தால் நீக்கப்பட்ட சக பணியாளர் வெறிச்செயல்!

ஆத்திரம் அடைந்த விக்னேஷ் இதற்கு தன்னுடன் பணிபுரியும் வேலன் தான் காரணம் என...
Sweeper killed by co-worker
Sweeper killed by co-worker
Published on
Updated on
1 min read

சென்னை மாவட்டம், மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஏகாம்பரம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் வேலன். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் சில வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். எனவே வேலன் அவரது மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். வேலன் எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

அதே நிறுவனத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக விஜய் மற்றும் விக்னேஷ் என இருவர் பணிபுரிந்து வந்த நிலையில், விக்னேஷ் சரியாக வேலை செய்யாமலும் மற்றவர்களை தேவை இல்லாமல் வம்பிழுத்து கொண்டும் இருந்துள்ளார். இதன் காரணமாக சில நாட்களுக்கு முன்பு நிறுவனம் விக்னேஷை வேலையை விட்டு நீக்கியுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் இதற்கு தன்னுடன் பணிபுரியும் வேலன் தான் காரணம் என தனது நண்பர் விஜய்யிடம் கூறியுள்ளார்.

பின்னர் விஜய் மற்றும் விக்னேஷ் இருவரும் சேர்ந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, சென்னை மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோயில் தெருவில் தனது சொந்த வேலைக்கு சென்று கொண்டிருந்த வேலனை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தனக்கு விக்னேஷின் வேலை பறிக்கப்பட்டதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என பலமுறை வேலன் எடுத்துக் கூறியும் அதை விக்னேஷ் மற்றும் விஜய் ஏற்றுக்கொள்ளாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து மூவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் விக்னேஷும் விஜயும் சேர்ந்து வேலனை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் வேலனின் தலையில் அப்பகுதியில் இருந்த கல்லை போட்டு தாக்கியுள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வேலனை காப்பாற்ற வந்த நிலையில் விஜய் மற்றும் விக்னேஷ் அப்பகுதியில் இருந்து தப்பி சென்றுள்ளனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த வேலனை மீட்ட அப்பகுதி மக்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக வேலன் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வேலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற விஜய் மற்றும் விக்னேஷை கைது செய்த போலீசார் விஜய் மற்றும் விக்னேஷ் அளித்த வாக்குமூலத்தின் படி இச்சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற இரண்டு நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ஒருவர் தலையில் கல்லால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com