

சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள மாதவப் பெருமாள் கோவில் வாசலில் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரை வழிமறித்த மர்ம கும்பல் கத்தியால் ஓட ஓட வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பட்டினப்பாக்கம் ஸ்ரீனிவாசன்புரம் பகுதியை சேர்ந்தவர் 20 வயதுடைய அஸ்வத் எனப்படும் சூசை. இவர் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை மயிலாப்பூர் பகுதிக்குட்பட்ட மாதவப் பெருமாள் கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அஸ்வத்தை முன்கூட்டியே திட்டம் தீட்டி பின் தொடர்ந்து வந்த கும்பல், கத்தியை கொண்டு ஓட ஓட துரத்தி வெட்டியுள்ளனர். தலையில் ஆழமான காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த அஸ்வத்தையை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாப்பூர் போலீசார் ரத்த வெள்ளத்தில் மிதந்த அஸ்வத்தையை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்த அஸ்வத் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கொலை முயற்சி வழக்காக இருந்ததை கொலை வழக்காக மாற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் குற்றவாளிகளின் இருசக்கர பதிவு எண்ணை வைத்து தனிப்படை அமைத்து அவர்களை தேடிவருகின்றனர். கடந்த 21 ஆம் தேதி இதே மயிலாப்பூர் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட மந்தைவெளி பகுதியில் மவுலி என்ற இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில்,10 நாட்களுக்குள்ளாக அடுத்தடுத்து அரங்கேறி உள்ள இரு கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.