
கடலூர் மாவட்டம், முதுநகர் அருகே உள்ள சங்கொலி குப்பத்தை சேர்ந்தவர் சூர்யா. இவர் அதே பகுதியில் உள்ள மூடப்பட்ட பீர் கம்பெனியில் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சூர்யா தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியம், சரத் குமார் முனியப்பன் ஆகியோருடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது சூர்யா மதுபோதையில் தனது நண்பர்களை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
சரத்குமாரும், முனியப்பனும் சூர்யாவிடம் எடுத்து சொல்லி தகாத வார்த்தைகளால் பேசுவதை நிறுத்த சொல்லியுள்ளனர். ஆனால் அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் சூர்யா தொடர்ந்து தகாத வார்த்தைகளை பேசி வந்துள்ளார். எனவே சரத்குமாரும், முனியப்பனும் அந்த இடத்திலிருந்து கிளம்பி சென்றுள்ளனர் இதையடுத்து பாலசுப்ரமணியமும் சூர்யாவும் மீண்டும் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது சூர்யா பாலசுப்பிரமணியத்தை தொடர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி வந்ததாக சொல்லப்படுகிறது இதனால் ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணியம் சூர்யாவை கீழே தள்ளி விட்டு அருகில் இருந்த கல்லை தலையில் போட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
காலையில் அப்பகுதி வழியே சென்ற மக்கள் சூர்யாவின் உடலை பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு குடிகாடு பேருந்து நிறுத்தம் அருகில் போலீசாரை கண்டவுடன் பாலசுப்ரமணியம் தப்பி ஓட முயற்சித்துள்ளார், எனவே பாலசுப்ரமணியத்தை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்த பாலசும்பரமணியத்திடம் விசாரணை மேற்கொண்ட போது “குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நான் தான் சூர்யாவை தலையில் கல்லை போட்டு கொலை செய்தேன்” என ஒப்புக்கொண்டுள்ளார். இதனை அடுத்து பாலசுப்ரமணியம் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். இரவு நேர காவலாளி தலையில் கல்லை போட்டு கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.