திருநெல்வேலி மாவட்டம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த 32 வது பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். அப்போது நாகர்கோவிலை சேர்ந்த மாணவி “ஜி.ஜோசப்” என்பவர் கவர்னரிடம் பட்டம் வாங்க விருப்பம் இல்லாமல் மேடையில் கவர்னர் அருகே நின்று கொண்டிருந்த துணைவேந்தர் சந்திரசேகரிடம் பட்டத்தை கொடுத்து வாங்கிக் கொண்டார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
இது குறித்து அந்த மாணவி கூறும் போது “நான் தனியார் நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி வருகிறேன். தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் எதுவும் செய்யாத கவர்னரிடம் பட்டம் வாங்க எனக்கு உடன்பாடு இல்லை, அதனால் துணைவேந்தரிடம் பட்டத்தைப் பெற்றுக் கொண்டேன் மேலும் தமிழுக்கு எவ்வளவோ செய்தவர்களை அல்லது சாதனை புரிந்தவர்களை பட்டம் அளிக்க அழைத்திருக்கலாம். துணைவேந்தர் பல்கலைக்கழகத்திற்கு பல நன்மைகளை செய்துள்ளார் அவரிடம் வாங்கியது பெருமையாக நினைக்கிறேன். தமிழுக்கும் தமிழகத்திற்கும் எதுவும் செய்யாத கவர்னரை எனது செயல் மூலம் கேள்வி கேட்க வேண்டும் என நினைத்தேன் அதனாலேயே பட்டத்தை துணைவேந்தரிடம் பெற்றேன் இது யாருடைய தூண்டுதலும் இன்றி நானே முடிவு செய்தது” என தனது செயலுக்கு விளக்கத்தினை தெரிவித்துள்ளார்.
இந்த செயலை பல்வேறு தரப்பினர் பாராட்டி வரும் நிலையில் சிலர் கவர்னரை அவமதித்தது குறித்து கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். கவர்னர் இடம் பட்டம் வாங்க மறுத்த மாணவியின் கணவர், ராஜன் நாகர்கோவில் திமுக மாநகர துணை செயலாளர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.