

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகே கம்பிளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூர்யா. இவரும் அதே பகுதியை சேர்ந்த மனோகரன் மற்றும் பசுபதி ஆகிய மூவரும் சிறுவயதிலிருந்து நண்பர்கள் என சொல்லப்படுகிறது. சூர்யா கூலித்தொழில் செய்து வந்த நிலையில் பசுபதி ஜேசிபி ஓட்டுநராகவும், மனோகரன் அதே பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வந்தார். இதில் பசுபதிக்கு 21 வயதில் ஒரு தங்கை உள்ளார். மூவரும் நண்பர்கள் என்பதால் அவ்வப்போது சூர்யா மற்றும் மனோகரன் பசுபதி வீட்டிற்கு செல்வதால் அவரது குடும்பத்துடன் நன்கு பழகி வந்திருக்கின்றனர்.
மேலும் மூவரும் ஒன்றாக சேர்ந்து இரவு நேரங்களில் கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாந்தோப்பில் அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்திருக்கின்றனர். சூர்யா பசுபதியிடம் அவ்வப்போது “மச்சான் உன் தங்கச்சி அழகா இருக்கா ” என கூறி வந்திருக்கிறார். தொடக்கத்தில் நண்பன் ஏதோ விளையாட்டாக சொல்லியிருப்பார் என நினைத்த பசுபதி அதை கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார். ஆனால் நாளுக்கு நாள் சூர்யா பசுபதியி தங்கை குறித்து தவறாக பேச தொடங்கியுள்ளார். இதனால் கோபமடைந்த பசுபதி சூர்யாவை கண்டித்ததாக சொல்லப்படுகிறது, இருப்பினும் சூர்யா தொடர்ந்து பசுபதியின் தங்கை குறித்து தவறாக பேசி வந்துள்ளார்.
வழக்கம் போல மூவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாந்தோப்புக்கு மது அருந்த சென்றிருக்கின்றனர். பின்னர் ஒன்றாக அமர்ந்து மது அருந்திய நிலையில் சூர்யா பசுபதியிடம் “டேய் மச்சான் உன் தங்கச்சி நச்சுனு இருக்கா” என கூறியுள்ளார் மேலும் அவரது தங்கையின் நம்பர் கொடுக்க சொல்லி கேட்டு தொல்லை செய்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நம்பர் கொடுக்கவில்லை என்றால் பசுபதி மற்றும் அவரது காதலியின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பசுபதி மற்றும் மனோகரன் ”நண்பனின் தங்கை உனக்கும் தங்கை போல இப்படி பேசுகிறாயே” என கண்டித்திருக்கின்றனர். இருப்பினும் சூர்யா நிறுத்தாமல் தொடர்ந்து பசுபதியின் தங்கை குறித்து பேசியதால் பசுபதி மற்றும் மனோகரன் சேர்ந்து சூர்யாவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பி சென்றிருக்கின்றார். மறுநாள் காலை தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து பசுபதி மற்றும் மனோகரனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் மாந்தோப்பில் பதுங்கியிருந்த பசுபதி மற்றும் மனோகரனை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். சிறுவயதில் இருந்த நண்பர்களாக இருந்தவர் வாலிபரை தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்