
நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்துள்ள தூதூர் கிராமத்தை சேர்ந்தவர் 40 வயதுடைய நாகராஜ். இவர் விவசாய தொழில் செய்து வரும் நிலையில் இவரின் நடத்தைகளை பார்த்து அக்கம் பக்கத்தினர் நாகராஜை பைத்தியம் என சொல்லி கேலி செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த நாகராஜ் அதே பகுதியில் உள்ள ஒரு சாமியாரை சந்தித்து இதை பற்றி தெரிவித்துள்ளார்.
அதற்கு சாமியார் “ஒரு பூஜை போதும் இனி யாரும் உன்னை அப்படி சொல்ல மாட்டாங்க” என கூறியுள்ளார். இதனை நம்பிய நாகராஜ் சாமியார் கூறியது போல சரக்கு வாங்கிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு சாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். நாகராஜ் வாங்கி வந்த மதுவை அருந்திய சாமியார் தனது வீட்டில் இருந்த சிவன் சிலைக்கு முன்பாக நாகராஜை அமரவைத்துள்ளார்.
பின்னர் பூஜை செய்கிறேன். என்ற பெயரில் எதை எதையோ செய்த சாமியார் நாகராஜ் எதிர்பாராத விதமாக அங்கிருந்த கத்தியை எடுத்து நாகராஜின் தலையில் வெட்டியுள்ளார். வெட்டிய இடத்தில் விபூதி பூசிவிட்டு மீண்டும் மந்திரங்களை கூறியுள்ளார். வெட்டிய இடத்தில் இருந்து ரத்தம் அதிகமாக வெளியேறவே வலி தாங்க முடியாமல் நாகராஜ் கத்தி கொண்டே வெளியில் ஓடி வந்துள்ளார்.
நாகராஜ் அலறல் சத்தம் கேட்டு வெளியில் வந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நாகராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சாமியாரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர் போலி சாமியார் என்பதும் அவர் பெயர் சிவகுமார் என்பதும் தெரியவந்துள்ளது.
சிவகுமார் 20 வருடங்களாக தன்னை சாமியார் என்று கூறி அப்பகுதி மக்களை ஏமாற்றி வந்துள்ளார். தன்னை சாமியார் என்று நம்பவைக்க அவ்வப்போது போலியாக சித்து வேலைகளையும் செய்திருக்கிறார். உள்ளூர் மக்கள் மட்டும் இல்லாமல் அமாவாசை பௌர்ணமி நேரங்களில் இவரை பார்க்க வெளியூரில் இருந்தும் மக்கள் வந்துள்ளனர்.
போலீசார் சிவகுமாரை கைது செய்வதற்கு முன்பு சிவகுமார் குறி சொல்வது போல நடித்து “எல்லாம் பொய் எல்லாம் பொய் ரத்தம் பொய் அவன் சொன்னதுதான் நான் செய்தேன்” என சிவன் சிலையை கட்டிப்பிடித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.