ஆந்திர மாநிலம், பால்நாடு மாவட்டம் மச்செர்லா பகுதியை சேர்ந்தவர் சந்திர சீனு. இவருக்கு 22 வயதில் சௌடேஸ்வரி என்ற மகள் இருந்த நிலையில் சந்திர சீனு வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்திருக்கிறார். சௌடேஸ்வரிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பக்கத்துக்கு வீட்டு வாலிபரான ஜம்மலமடுகு பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
சந்திர சீனு மிகவும் கண்டிப்பானவர் என சொல்லப்படும் நிலையில் தந்தைக்கு பயந்து சௌடேஸ்வரி தனது காதல் குறித்து வீட்டில் மறைத்து வந்திருக்கிறார். இந்த நிலையில் சந்திர சீனு, சௌடேஸ்வரிக்கு திருமண ஏற்பாடுகள் செய்து அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்து வைத்திருக்கிறார். எனவே காதலர்கள் இருவரும் சேர்ந்து கடந்த மாதம் தொடக்கத்தில் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து காதலர்கள் இருவரும் சென்னையில் உள்ள நண்பர்கள் வீட்டில் தங்கி வசித்து வந்திருக்கின்றனர்.
இதற்கிடையில் மகள் திருமணம் செய்து கொண்டதை அறிந்த சந்திர சீனு காவல் நிலையத்திற்கு சென்று தனது மகள் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடி கொண்டு தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக புகாரளித்திருக்கிறார். தொடர்ந்து தனது மகளை கண்டுபிடித்து தராவிட்டால் இங்கேயே தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வேன் என தற்கொலை முயற்சி செய்திருக்கிறார். எனவே வழக்குப்பதிவு செய்த போலீசார் காதலர்களின் செல்போன் எண்களை ட்ராக் செய்து அவர்களை கண்டுபிடித்து விசாரித்த போது சந்திர சீனு சொன்னது போல சௌடேஸ்வரி எந்த நகையும் எடுத்து செல்லவில்லை என்பது தெரியவந்தது.
தொடர்ந்து காதல் ஜோடிகளை சமாதானம் பேசி பெற்றோர்களிடம் ஒப்படைத்த நிலையில் சௌடேஸ்வரி நாராயணன் உடன் சேர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்திருக்கிறார். எனவே ஊர் பெரியவர்கள் சௌடேஸ்வரி மற்றும் நாராயணனை ஐந்து நாட்களுக்கு அவர் அவர் பெற்றோர் வீட்டில் இருக்க சொன்ன நிலையில் இருவரும் தனித்தனியே வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த (மார்ச் 18) தேதி சௌடேஸ்வரி வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கையில் சௌடேஸ்வரி கொலை செய்யப்பட்டது உறுதியான நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அப்போது சௌடேஸ்வரியின் தந்தை சந்திர சீனு குடும்ப கௌரவத்தை கெடுத்ததால் தானே தன் மகளை கழுத்தை நெரித்து கொன்று தூக்கில் மாட்டியதாக ஒப்புக்கொண்டார். எனவே போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.