ஹரியானா மாநிலம், குடன்புரி பகுதியை சேர்ந்தவர் 30 வயதுடைய தீபக் குமார். இவரும் அதே பகுதியை சேர்ந்த 28 வயதுடைய சோனம் என்ற பெண்ணும் ஒரே கல்லூரியில் படித்து வந்த நிலையில் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். அப்போது சோனமுக்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் தீபக் மற்றும் சோனத்தின் நட்பு காதலாக மாறி இருவரும் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர்.
எனவே இருவரும் குருகிராம் பகுதிக்கு சென்று வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்திருக்கின்றனர். தற்போது இந்த தம்பதிக்கு ஆறு வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் சோனம் ஒரு தனியார் நிறுவனத்திலும், தீபக் கார் ஓட்டுநராகவும் பணிபுரிந்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சோனமுக்கு அவரது நிறுவனத்தில் பணி உயர்வு கிடைத்த நிலையில் அதில் கிடைத்த பணத்தை வைத்து சோனம் தனது கணவருக்கு சொந்தமாக கார் வாங்கி கொடுத்திருக்கிறார். அதனை தொடர்ந்து தீபக் வாடகைக்கு கார் ஓட்டி வந்த நிலையில் குடிபோதைக்கு அடிமையானதாகச் சொல்லப்படுகிறது.
நாளடைவில் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் தீபக் சோனமிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்து வந்திருக்கிறார். மேலும் சோனம் வேறு சில ஆண்களுடன் தொடர்பில் இருப்பதாக நினைத்து சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தீபக் தனது மனைவியை பிரிந்து தாய் தந்தையுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் சோனம் தனது தங்கை சங்கீதாவுடன் வீட்டில் வசித்து வந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு சங்கீதா தனது சொந்த வேலைக்காக வெளியூருக்கு சென்றிருக்கிறார். அப்போது வீட்டில் சோனம் மட்டும் தனது மகனுடன் தனியாக இருந்த போது வீட்டிற்கு சென்ற தீபக் “தினமும் எவன் கூட வீடியோ கால் பேசுற” என கேட்டு மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். தொடர்ந்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து வீட்டிற்கு சென்ற சோனமின் தங்கை சங்கீதா போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டதில் சோனம் சில ஆண்களுடன் பேசி வந்தது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. 6 வயது மகனை வைத்து கொண்டு கணவன் மனைவி கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.