தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள புழுதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ரவிச்சந்திரன் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உமாராணி. இவர்களுக்கு சுமார் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணமாகி அவர் கணவர் வேட்டல் வசித்து வருகிறார், மேலும், மகன் வெளிநாட்டில் பணியாற்றி வருவதால் வீட்டில் கணவன் மனைவி மட்டும் தனியாக வசித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், ரவிச்சந்திரன் தனது குடும்பத்திற்காக புதிதாக வீடு கட்டி வந்ததாக தெரிகிறது.
இதற்காக அவரது பெயரில் பல்வேறு நபர்களிடமும், தனியார் நிதி நிறுவங்களிலும் சுமார் ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. வாங்கப்பட்ட கடன் முழுவதும் ரவிச்சந்திரனின் பெயரில் இருந்ததால், இந்தக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய சூழ்நிலையில் இருந்து தப்பிக்க, அவரது மனைவி கணவர் ரவிச்சந்திரனை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக, தனது தம்பி ஞானசேகரனுடன் சேர்ந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே ரவிச்சந்திரனின் உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அந்த முயற்சியில் உயிர் தப்பிய ரவிச்சந்திரன், அதன் பின்னர் வீட்டில் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்த்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் வெளியில் உணவருந்திவிட்டு ரவிச்சந்திரன் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் இன்று அதிகாலை, அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, மனைவி உமாராணியும், அவரது தம்பி ஞானசேகரனும் சேர்ந்து ரவிச்சந்திரனின் காதில் விஷத்தை ஊற்றியதாக கூறப்படுகிறது. திடீரென காதில் எரிச்சலை உணர்ந்து விழித்த ரவிச்சந்திரன், மனைவியை தள்ளிவிட்டு வீட்டிலிருந்து வெளியே தப்பி ஓடி அதிகாலை இருட்டாக இருந்ததால் அருகில் இருந்த கோவிலில் தஞ்சமடைந்து விடியும் வரை காத்திருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் வெளிச்சம் வந்த பிறகு அந்த வழியாக சென்ற ஒருவரிடம் தனது காதில் என்ன ஊற்றப்பட்டுள்ளது என பார்த்து கூறுமாறு ரவிச்சந்திரன் கேட்டுள்ளார். காதில் திரவம் போன்ற எதோ ஊற்றப்பட்டிருப்பதா அவர் தெரிவித்ததை அடுத்து, அவரது உதவியுடன் ரவிச்சந்திரன் உடனடியாக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த ரவிச்சந்திரனிடம் விசாரணை நடத்தி அவரது புகாரை பதிவு செய்தனர்.
அதன்பேரில், மனைவி உமாராணி மற்றும் அவரது தம்பி ஞானசேகரன் ஆகிய இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரூ.10 லட்சம் கடன் விவகாரத்தில், கணவரை அடுத்தடுத்து இரண்டு முறை விஷம் வைத்து கொலை செய்ய முயன்றதாக கூறப்படும் இந்த சம்பவம் திருவிடைமருதூர் மற்றும் புழுதிக்குடி பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பணப் பிரச்சினை மட்டுமே காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.