

பெங்களூருவின் புரூக்ஃபீல்ட் பகுதியில் உள்ள கேப்ஜெமினி நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வந்த பகல்நேர குழந்தைகள் பராமரிப்பு மையத்தில், இரண்டு முதல் மூன்று வயதுடைய குழந்தைகள் உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, அந்த பராமரிப்பு மையத்தில் பணியாற்றிய ஐந்து பெண் பராமரிப்பாளர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம், நிறுவன வளாகங்களில் இயங்கும் குழந்தைகள் பராமரிப்பு மையங்களின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடைமுறைகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
காவல்துறை தகவலின்படி, குழந்தைகள் முன்புறம் துணி போடும் சலவை இயந்திரத்தின் உருளைக்குள் உட்காருமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், வெஸ்டர்ன் டாய்லெட்யில் அமர வைத்தபோது டாய்லெட் ஜெட் ஸ்ப்ரே மூலம் அவர்களின் வாயில் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், குழந்தைகள் அழுதபோது அவர்களை குளியலறைக்குள் பூட்டி வைத்ததாகவும், வாய்மொழி மிரட்டல்கள் மற்றும் உடல்ரீதியான துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு, குழந்தைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் வீடியோக்கள் திங்கள்கிழமை வாட்ஸ்அப் குழுக்களில் பரவியதைத் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்தது. பின்னர் அந்தக் காணொளிகள் குழந்தைகள் உதவி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தை கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. சம்பவம் தொடர்பாக அதிகாரிகளிடம் விரிவான அறிக்கையை கோரியுள்ள ஆணையம், குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன விசாரணையும் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. நிறுவனங்களில் நீண்ட நேரம் பணியாற்றும் பெற்றோர், தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அங்குள்ள பராமரிப்பு மையங்களில் ஒப்படைப்பதாகவும், "ஒரு பன்னாட்டு நிறுவன வளாகத்தில் இயங்கும் குழந்தைகள் காப்பகத்திலேயே இத்தகைய கொடுமை எப்படி நடந்தது?" என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், பகல்நேர பராமரிப்பு மைய ஊழியர்களுக்கு கட்டாய பின்னணிச் சோதனை நடத்த வேண்டும், குழந்தைகள் பராமரிப்பு மையங்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பலர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து கேப்ஜெமினி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வே எங்களின் முதன்மை முன்னுரிமை. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மேற்கொண்டு வரும் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெங்களூரு வளாகத்தில் செயல்பட்டு வந்த பகல்நேர குழந்தைகள் பராமரிப்பு மையத்தை தற்காலிகமாக மூடியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளது.
தற்போது இந்த வழக்கில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வைரலான காணொளிகளின் உண்மைத்தன்மை, குழந்தைகள் சந்தித்ததாகக் கூறப்படும் துன்புறுத்தலின் தன்மை மற்றும் இதற்கு பொறுப்பானவர்கள் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.