
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்துள்ள அம்மனுர் பகுதியை சேர்ந்த 45 வயதான சுதாகர். இவர் பைனான்ஸ் கம்பெனி மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார், சுதாகரின் மனைவி அஸ்வினி அதே பகுதியில் திமுக ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். சுதாகரின் பைனான்ஸ் கம்பெனியில் 21 வயதான அவினேஷ் என்ற இளைஞர் வேலை பார்த்து வந்துள்ளார். சுதாகர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தனது பைனான்ஸ் அலுவலகத்தில் அடிக்கடி மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
அதுபோல கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தனது நண்பர்களுடன் சுதாகர் அவரது பைனான்சில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுடன் சேர்ந்து பைனான்சில் பணிபுரியும் அவினேஷும் மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் சுதாகர் அவினேஷின் தாய் குறித்து தரக்குறைவாக பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவினேஷ் சுத்தக்கரை அரிவாளால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சுதாகரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நண்பர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவினேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் இருந்த அவினேஷ் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார். அதன்படி தினந்தோறும் ரத்தனகிரி காவல் நிலையத்திற்கு சென்று அவினேஷ் கையெழுத்திட்டு வந்துள்ளார். இதனை அறிந்து கொண்ட சுதாகர் தன்னை அரிவாளால் வெட்டி அவமானப்படுத்திய அவினேஷை பழிவாங்க நினைத்து கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்ற அவினேஷை சுதாகர் மற்றும் அவரது நண்பர்கள் பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.
தன்னை கொலை செய்ய சுதாகர் பின் தொடர்ந்து வருவதை தெரிந்து கொண்ட அவினேஷை தன்னை தற்காத்துக்கொள்ள அவர்களிடமிருந்து தப்பித்து ஓட தொடங்கியுள்ளார். இருப்பினும் சுதாகர் அவரை விடாது துரத்தியதால் தன்னை காப்பாற்றிக்கொள்ள அவினேஷ் அருகில் இருந்த செருப்பு கடைக்குள் சென்று தன்னை காப்பாற்றிக்கொள்ள நினைத்துள்ளார்.
அப்போது கடையின் வாசலில் அவினேஷை வழிமறித்து சுதாகர் மற்றும் அவரது நண்பர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவினேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதற்கிடையே அவினேஷை வெட்டி கொலை செய்த சுதாகர் உட்பட நான்கு பெரும் ரத்தினகிரி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.