
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் சித்திரை செல்வம். இவர் ஷேர் ஆட்டோ ஓட்டி வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த திட்டமிட்டு. சித்திரை செல்வம், விக்னேஷ், சிவகுமார் ஆகிய மூவரும் ஆட்டோவில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் மது கடைக்கு சென்றுள்ளனர்.
அப்போது வழியில் ஆட்டோவை மறித்த 40 வயது நபர் ஒருவர் தன்னை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இறக்கி விடும் படி கூறி ஆட்டோவில் ஏறியுள்ளார். நண்பர்கள் மூவரும் மது அருந்துவதை பற்றி பேசிக்கொண்டதை கேட்ட நபர் “நானும் உங்களோடு சேர்ந்து மது அருந்தலாமா என கேட்டுள்ளார்” பின்னர் நான்கு பேரும் சேர்ந்து மாட்டுத்தாவணி மதுபான கடைக்கு சென்றுள்ளனர்.
மாட்டுத்தாவணி மதுபான கடையில் கூட்டமாக இருந்ததால் சம்பக்குளம் பகுதியில் உள்ள மதுபான கடைக்கு சென்று அங்கு மது பாட்டில்களை வாங்கி விட்டு மீண்டும் ஒத்தக்கடைக்கு சென்றுள்ளனர். அங்கு மயானத்திற்கு அருகில் ஆட்டோவை நிறுத்திவிட்டு மாயணத்திற்குள் சென்று மது அருந்தியுள்ளனர். போதையில் பாடல்களை ஒலிக்கவிட்டு நண்பர்கள் மூவரும் நடனமாடியுள்ளனர்.
நண்பர்கள் புதிய பாடல்களை போட்டு நடனமாடிய நிலையில் 40 வயதான நபர் பழைய பாடல்களை போடுமாறு கேட்டுள்ளார். இதற்கு நண்பர்கள் மறுப்பு தெரிவிக்கவே இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மிகுந்த கோபமடைந்த நண்பர்கள் 40 வயது நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் அவரது ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கி கற்களால் அடித்து கொன்று விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
காலையில் அவ்வழியே சென்ற போது மக்கள் நிர்வாணமாக ஒரு ஆண் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து விட்டு போலீசில் தகவலாளித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.
அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மூன்று நண்பர்களையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பதை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.