நடிகர் சிவக்குமார் எழுதிய சுயசரிதையில்.. போக்ஸோ வழக்கில் சிக்கிய "ஜெம்" வீரமணியின் பெயர் - என்ன நடந்தது?

"கண்ணம்மா பேட்டையில் அவருக்கு, 'நண்பர் ஜெம் வீரமணி' கருப்பு கிரானைட்டில் இலவசமாக சமாதி கட்டித்தந்தார்"
GEM Veeramani POCSO Case
GEM Veeramani POCSO Case
Published on
Updated on
2 min read

பிரபல கிரானைட் தொழிலதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான 84 வயதான வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கில், 50 வயதாகும் பெண் ஒருவர், தனக்கு 13 வயதாக இருந்தபோது வீரமணி தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை எழுப்பியுள்ளது.

இதில் பல சிறுமிகள் சிக்கவைக்கப்பட்டிருந்ததாகவும், அதிலும் ஏழை சிறுமிகளை வீரமணிக்கு அறிமுகப்படுத்தியதாக அந்தப் பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளர். ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம், ஒழுக்கக்கேடு தடுப்புப் பிரிவை அணுகியதைத் தொடர்ந்து, கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணையில் காணொளியில் இடம்பெற்றிருந்த சிறுமியை காவல்துறையினரால் அடையாளம் காண முடியாததால், வழக்கை முடித்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியது.

இதற்கிடையே, சிறப்பு போக்சோ நீதிமன்றம் அந்த அறிக்கையை நிராகரித்து, வழக்கில் மேலும் விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக, வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவரான வீரமணி, மற்றும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் உதவியாளர் சாந்தி மற்றும் அவரது நிறுவனத்தில் பணிபுரிந்த மகேந்திரசிம்மன் ஆகியோர் கடந்த (ஆக 29) ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

தற்போது போலீஸ் காவலில் உள்ள வீரமணியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்குவதாகக் கூறி அறக்கட்டளை மற்றும் ஆசிரமங்கள் நடத்தப்பட்டதாகவும், அதன் மூலம் பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் உள்ளிட்டோர் அணுகப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களுக்கு ஆடைகள், செலவுக்குப் பணம், செல்போன்கள் உள்ளிட்டவற்றை வழங்கியதுடன், அவர்களின் பள்ளி மற்றும் கல்லூரி கல்விக்கான செலவுகளை வீரமணி ஏற்றுக்கொள்வார் எனக் கூறி, போயஸ் கார்டன் பங்களாவுக்கு அழைத்துச் சென்றதாகவும் போலீசாரால் தெரிவிக்கப்பட்டது.

இந்த குற்றமானது பல ஆண்டுகாலாக நடந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், போயஸ் கார்டன் பகுதியில் மாதம் ரூ.2 லட்சம் வாடகையில் பங்களா ஒன்றை எடுத்து, அங்கு தனது தொழில் கூட்டாளிகளுக்காக சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது ஒருபுறம் இருக்க தற்போது நடிகர் சிவகுமார் எழுதிய 'சுயசரிதை' நூலில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படும் 'ஜெம் வீரமணி' யின் பெயர் இடம்பெற்றிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

தனது சமூக வலைத்தளப்பக்கதில் எழுத்தாளரும், பெண்ணியவாதியும், சமூக செயற்பாட்டாளருமான ஷாலின் மரிய லாரன்ஸ் பதிவிட்டுள்ளது தற்போது பேசு பொருளாகியுள்ளது. அதாவது, "நடிகர் சிவகுமார் அவர்கள் ஒரு சுய சரிதை எழுதி இருக்கிறார்.

அதில் அவர் அம்மா இறந்த போது அவருக்கு அவரின் நண்பரான ஜெம் வீரமணி கருப்பு கிரானைட்டில் கண்ணமாப்பேட்டையில் இலவசமாக சமாதி கட்டி தந்தார் என்று இருக்கிறது. சினிமா மட்டும் அல்ல. இலக்கிய உலகிலும் நிறைய தொடர்பு வீரமணிக்கு", என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அவர் அதற்கு ஆதாரமாக நடிகர் சிவகுமார் எழுதிய 'சுய சரிதை' புத்தகத்தில் இருந்து அந்தப்பகுதியை மட்டும் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சிவகுமார், அவரது தாயார் இறந்த பின்னர், அவரது மனைவியிடம் உடைந்து அழுதது, அவரது தாயாரின் இறுதி சடங்கிற்கு வந்து இறுதி மரியாதையை செலுத்தியவர்கள் குறித்து அவர் எழுதியிருந்தார்.

பின்னர் இறுதியாக அதில், "கண்ணம்மா பேட்டையில் அவருக்கு, 'நண்பர் ஜெம் வீரமணி' கருப்பு கிரானைட்டில் இலவசமாக சமாதி கட்டித்தந்தார்" என்று குறிப்பிட்டு நடிகர் சிவகுமார் எழுதியிருந்தது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தற்போது தொழிலதிபர்கள், முக்கிய புள்ளிகள் ஆகியோருக்கு மட்டுமே தொடர்பிருந்ததாக கருதப்படும் ஜெம் வீரமணி, சினிமா துறையிலும் கூட பெரிய தலைகளோடு தொடர்பில் இருக்கிறாரா? என்ற கேள்வியையும், இதில் சினிமா பிரபலங்களுக்கும் பங்கு இருக்குமோ என்ற கேள்வியையும் அனைவருக்கும் எழுப்பியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com