“கடலூரில் இருக்கிறாரா செஞ்சி சிறுமி?” - போலீசாருக்கு வந்த அந்த ஒரு போன் கால்.. தலைவிரி கோலத்தில் யாசகம் எடுத்த குழந்தை!

சிறுமியின் வீட்டிற்கு எதிரே உள்ள சுடுகாடு மற்றும் மலைப்பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்...
“கடலூரில் இருக்கிறாரா செஞ்சி சிறுமி?” - போலீசாருக்கு வந்த அந்த ஒரு போன் கால்.. தலைவிரி கோலத்தில் யாசகம் எடுத்த குழந்தை!
Published on: 
Updated on: 
2 min read

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தில் 7 வயது சிறுமி மாயமான வழக்கில், 24 நாட்களைக் கடந்தும் இதுவரை எந்தத் துப்பும் கிடைக்காத நிலையில், கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் சிறுமியைப் போன்ற தோற்றமுடைய குழந்தை ஒருவர் 30 வயது பெண்ணுடன் யாசகம் கேட்டதாக நபர் ஒருவர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராஜதுரையின் நண்பர் அரவிந்த் என்பவரை ஆலம்பூண்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிபிசிஐடி போலீசாரின் தற்காலிக விசாரணை மையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் தனது வாகனத்தில் அரவிந்தை அழைத்துச் சென்று பரதன்தாங்கல் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் விசாரணை மேற்கொண்டார். பின்னர், சிறுமியின் வீட்டிற்கு எதிரே உள்ள சுடுகாடு மற்றும் மலைப்பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே, கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள வயலாமூர் கிராமத்தைச் சேர்ந்த 43 வயதுடைய அருள்ஜோதி என்பவர், சிறுமி மாயமானது தொடர்பாக முக்கியத் தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார். கொத்தனார் வேலை செய்து வரும் இவர், சில நாட்களுக்கு முன்பு புவனகிரி காந்தி சிலை அருகே உள்ள சலூன் கடைக்கு முடி திருத்தம் செய்யச் சென்றுள்ளார். அப்போது, பெண் ஒருவர் சிறுமியுடன் அங்கு வந்து யாசகம் கேட்டதாகவும், அவர்களுக்கு அருள்ஜோதி ரூ.100 வழங்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்குச் சென்ற அவர், தொலைக்காட்சியில் சிறுமி மாயமானது தொடர்பான செய்தியைப் பார்த்துள்ளார்.

bhuvanagiri unknown person issue about gingee girl
bhuvanagiri unknown person issue about gingee girl

அப்போது, செய்தியில் வெளியான ஆலம்பூண்டி சிறுமி ஹேமலதாவின் புகைப்படத்தைப் பார்த்தபோது, தன்னிடம் தலைவிரிகோலத்தில் யாசகம் கேட்ட சிறுமியும் அதே தோற்றத்தில் இருந்ததாகச் சந்தேகமடைந்துள்ளார். இதையடுத்து, அருள்ஜோதி 100 என்ற அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் புவனகிரி போலீசார் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல ஆலோசகர் உள்ளிட்டோர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அருள்ஜோதி குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், அவர் தெரிவித்த இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

தற்போது அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் அளித்த தகவல்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளைச் சரிபார்த்த பின்னரே, யாசகம் கேட்ட சிறுமி மாயமான ஹேமலதாதானா என்பது குறித்து உறுதியான தகவல் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.சிறுமி மாயமாகி 24 நாட்களைக் கடந்தும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், புவனகிரியில் சிறுமியைப் போன்ற தோற்றமுடைய குழந்தை ஒருவர் தாயுடன் யாசகம் கேட்டதாக அளிக்கப்பட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சிறுமி மாயமான வழக்கில் புதிய தடயம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.