
வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வேணு அவரது மனைவி ஜனனி. இவர்களது நான்கு வயது குழந்தை யோகேஷ் குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ப்ரீ.கே.ஜி படித்து வருகிறார். வழக்கம் போல் இன்று மதியம் சுமார் 12.30 மணி அளவில் அவரது தந்தை வேணு தனது இருசக்கர வாகனத்தில் பள்ளியிலிருந்து யோகேஷ் அழைத்து வந்து வீட்டுக்குள் சென்றபோது கர்நாடகா பதிவு எண் கொண்ட காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் வேணு மீது மிளகாய் பொடி தூவி விட்டு நான்கு வயது குழந்தை யோகேஷை காரில் கடத்திச் சென்றுள்ளனர்.
உடனடியாக இதுகுறித்து குடியாத்தம் நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர காவல் துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிகளை ஆராய்ந்த போது காரின் பதிவு எண் போலி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக இதே பகுதியில் நோட்டமிட்டு குழந்தையை கடத்தியது காவல்துறையினர் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் 6 தனிப்படைகளை அமைத்து குழந்தையை தேடும் பணியில் வேலூர் மாவட்ட காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் காரில் கடத்திச் சென்ற சிறுவனை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மாதனூர் அருகே தேவிகாபுரம் என்ற பகுதியில் சாலை ஓரமாக கடத்தல் காரர்கள் விட்டு சென்ற நிலையில் அந்தப் பகுதி மக்கள் சிறுவன் கடத்தப்பட்ட செய்தி அறிந்து உடனடியாக இதுகுறித்த தகவலை அவர்களது உறவினருக்கும் குடியாத்தம் நகர காவல் துறையினருக்கும் தெரிவித்து அவரது புகைப்படத்தை அனுப்பி உள்ளனர்.
மாதனுர் பகுதி மக்கள் அனுப்பிய புகைப்படத்தை வைத்து அந்த சிறுவன் கடத்தப்பட்ட சிறுவன் தான் என்பது உறுதியான நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற குடியாத்தம் காவல்துறையினர் கடத்தப்பட்ட சிறுவனை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் மற்றும் குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து கடத்தப்பட்ட சிறுவனின் பெற்றோர் சிறுவன் கடத்தப்பட்ட இரண்டு மணி நேரத்தில் கண்டுபிடித்துக் கொடுத்த காவல்துறையினருக்கும் மற்றும் உடனடியாக செய்தி வெளியிட்ட செய்தியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் 2 மணி நேரத்தில் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.