அமெரிக்கா: வடக்கு கலிபோர்னியாவில் உள்ள பெர்க்லியில் இருக்கும் ஒரு பிரபலமான உணவகம் உட்பட பல இடங்களில் பாலியல் வக்கிர குணம் படைத்த ஒருவர் தனது காலணிகளில் மறைத்து வைத்திருந்த கேமராக்களைப் பயன்படுத்தி, பெண்களையும், சிறுமிகளையும் ரகசியமாகப் படம்பிடித்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெர்க்லி காவல் துறையின்படி , யூசி பெர்க்லிக்கு அருகிலுள்ள ஒரு உணவகத்தில், மறைத்து வைக்கப்பட்ட காலணி கேமராக்கள் மற்றும்மறைத்து வைக்கப்பட்ட கேமரா சாதனங்கள் ஆகியவை அடங்கிய ஒரு திட்டத்தை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, ஓக்லாந்தைச் சேர்ந்த 35 வயதான நோவா ஸ்டெய்ன் அக்டோபர் 30 அன்று கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பெர்க்லி நகர மையத்திற்கு அருகில் அமைந்துள்ள லாக்ஸ் ஸ்டாக் அண்ட் பேகல் உணவகத்தில் வரிசையில் காத்திருந்தபோது, ஒரு நபர் தனது பாவாடைக்கு அடியில் இருந்து வீடியோ எடுத்திருக்கலாம் என்று ஒரு பதின்மவயதுப் பெண் ஒருவர் அக்டோபர் 26 அன்று காவல்துறையிடம் சந்தேகத்தின் அடிப்படையில் தெரிவித்ததை அடுத்து இந்த குற்றம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அந்த இளம் பெண், இந்த சம்பவம் குறித்து கூறியபோது, தான் தவறுதலாக அந்த நபரின் காலை மிதித்துவிட்டதாகவும், பின்னர் தன்னை நோக்கி ஒரு கேமரா வைக்கப்பட்டிருப்பதைக் கவனித்ததாகவும் அவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
"அந்த பதின்ம வயது பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து, துப்பறிவாளர்கள் சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களைச் சேகரித்து, ஒரு சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்தபோது ஸ்டெய்ன் (குற்றவாளி) அப்பகுதியில் இருந்ததை உறுதிசெய்ய, புலனாய்வாளர்கள் தொழில்நுட்ப கருவியை பயன்படுத்தி கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும், அக்டோபர் 30 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலையில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு அதிகாரியை அணுகிய ஒரு நபர், “தன் காலணியில் கேமராவைப் பொருத்தியிருந்த ஒரு நபர், பெண்களின் ஆடைகளுக்கு அடியில் படம் பிடித்துக்கொண்டிருந்ததைப் பார்த்ததாகத் தெரிவித்தது, காவல்துறைக்கு இந்த விசாரணையில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. இதனையடுத்து சந்தேக நபர் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் இருந்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பம் நடந்ததாக கூறப்படும் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்திய தேடுதலின் போது, அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் வீசப்பட்டிருந்த ஒரு மினி கேமராவை அதிகாரிகள் மீட்டெடுத்துள்ளனர். மறைத்து வைக்கப்பட்ட வீடியோ பதிவு செய்யும் கருவியைப் பயன்படுத்தி அத்துமீறுதல், சிறுவர்களை தொந்தரவு செய்தல் அல்லது துன்புறுத்துதல் மற்றும் ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை தற்போது ஸ்டெய்ன் எதிர்கொண்டுள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை தொடர்ந்த நிலையில், துப்பறிவாளர்கள் ஓக்லாந்தில் உள்ள சந்தேக நபரின் வீட்டிற்கு சென்று சோதனையிட ஆணை பெற்றுள்ளனர். மேலும், அங்கு பல மின்னணு சாதனங்களை துப்பறிவாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அக்டோபர் 29 அன்று, வளாகத்திற்கு அருகிலுள்ள டாக்கோ பெல் கேன்டினிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் ஒரு கேமராவையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும், ஸ்டெய்ன் பல வாரங்களாக, பாதிக்கப்பட்டவர்கள் பலரை இரகசியமாகப் பதிவு செய்திருக்கலாம் என்றும் புலனாய்வாளர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
இதில் பல இளம்பெண்கள், சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று காவல்துறை தரப்பில் இருந்து சந்தேகிக்கப்படுகிறது. மேலும், இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.