
கர்நாடக மாநிலம் ஆனேக்கல் மாவட்டதில் உள்ள, மளெநல்லசந்திரா கிராமத்தில் வசித்து வருபவர் 53 வயதான விட்டல். இவர் கர்நாடக மாநிலத்தில் வாடகை கார் ஓட்டி வந்துள்ளார். விட்டலுக்கு இரண்டு முறை திருமணமான நிலையில் முதல் மனைவி இறந்துள்ளார். பின்னர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பெண்ணும் வேறு ஒரு நபருடன் சென்ற நிலையில் விட்டல் தனிமையில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் விட்டலுக்கும் அதே பகுதியை சேர்ந்த 26 வயதான வனஜா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வனஜாவும் கணவரை இழந்த நிலையில் விட்டலுக்கும் வனஜாவுக்கு இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. எனவே திருமணம் செய்து கொள்ளாமலே இருவரும் வீடு எடுத்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வனஜா தினமும் வேலைக்கு தனியாக சென்று வந்துள்ளார்.
திடீரென வனஜா விட்டலை அலட்சியம் செய்ய துவங்கினார். விட்டலிடம் சரியாக பேசாமல் இருப்பது, மாலையில் வீட்டிற்கு தாமதமாக வருவது அதிக நேரம் போன் பேசுவது என நடந்து கொண்டுள்ளார். அதாவது வனஜா அதே கிராமத்தை சேர்ந்த வேறு ஒரு இளைஞருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனால் வனஜாவிற்கும் விட்டலுக்கும் இடையே கடந்த ஒரு மாத காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்து வந்துள்ளது. மேலும் விட்டல் வனஜாவை பலமுறை கண்டித்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் வனஜா வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு தன் புதிய நண்பருடன் பன்னரகட்டாவில் இருந்து, பசவனபுராவுக்கு காரில் வனஜா சென்று கொண்டிருந்தார். இதை அதே வழியாக தன் காரில் சென்ற விட்டல் கவனித்தார். அவர்களை விரட்டிச் சென்று, ஹொம்மதேவனஹள்ளி அருகில் வழி மறித்த விட்டல் வனஜா இருந்த கார் மீது, 5 லிட்டர் பெட்ரோல் ஊற்ற முயற்சித்தார். இதனால் பீதியடைந்த வனஜாவும் அவரது நண்பரும் காரில் இருந்து இறங்கி ஓட தொடங்கினர்.
அப்போது வனஜாவை விரட்டி சென்று பிடித்த விட்டல் நாடு ரோட்டில் வைத்து வனஜாவின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வனஜாவின் உடலில் பற்றிய தீயை அணைத்து அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த வனஜா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நடுரோட்டில் பெண் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்