
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மேலக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் 38 வயதான முருகப்பெருமாள். இவருக்கு திருமணமாகி 35 வயதில் மகாலட்சுமி என்ற மனைவியும் செந்தில் குமார், முத்துச்செல்வம் என்ற குழந்தைகளும் உள்ளனர். லாரி ஓட்டுநரான முருகப்பெருமாள் மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ தான் வீட்டிற்கு வந்து செல்வாராம்.
எனவே வீட்டில் என்ன நடக்கிறது குழந்தைகள் எப்படி படிக்கிறார்கள் என்ற தகவல்கள் எல்லாம் முருகபெருமாள் அறிந்துகொள்ளாமல் இருந்துள்ளார். தற்போது லாரிக்கு சரக்கு இல்லை என்பதால் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் வீட்டிற்கு வந்து வீட்டில் இருந்துள்ளார். இவரது மனைவி காளான் வளர்ப்பு தொழிலாளியை முறையாக பயின்று வீட்டிற்கு முன்பு குடிசை அமைத்து காளான் வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்.
மேலும் மகாலட்சுமி பக்கத்துக்கு ஊரில் ஒரு தையல் கடையும் வைத்து நடத்தி வருகிறார். குழந்தைகளின் படிப்புக்கு, தொழில் செய்வதற்கு, வீட்டு செலவுகளை பார்த்து கொள்வதற்கு என மகாலட்சுமி அவ்வப்போது சிறு சிறு கடன்களை வாங்கியுள்ளார். அதை கட்டாததால் வட்டியுடன் சேர்ந்து இந்த கடன் அதிகமாகியுள்ளது. கடன் பெற்று வருடக்கணக்கில் ஆகும் நிலையில் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டுள்ளனர்.
நேரில் வந்தும் போன் செய்தும் என மகாலட்சுமியை கடன் கேட்டு தொல்லை செய்துள்ளனர். மகாலட்சுமி தான் வாங்கிய கடனை பற்றி முருகப்பெருமாளிடம் சொல்லாமல் இருந்துள்ளார். தற்போது வீட்டில் இருக்கவே முருகப்பெருமாளுக்கு மகாலட்சுமி வாங்கிய கடன் குறித்து தெரிய வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முருகப்பெருமான் “எனக்கு தெரியாம எவ்ளோ கடன் தான் வாங்கி வெச்சிருக்க, எதுக்கு முதல் நீ கடன் வாங்குன” என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் அக்கம்பக்கத்தினர் வந்து கணவன் மனைவியை சமாதானம் செய்துள்ளனர். பின்னர் இருவரும் வழக்கம் போல் வேலைகளை செய்து கொண்டிருந்துள்ளனர். மீண்டும் இன்று காலை இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி உள்ளது. இதில் ஆத்திரமடைந்த முருகப்பெருமாள் குழந்தைகளின் கண் முன்னே மகாலட்சுமியை சரமாரியாக வெட்டியுள்ளார்.
மகாலட்சுமியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள். அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் முருகப்பெருமாள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.