
விருதுநகர் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் 55 வயதான நாகராஜன். இவருக்கு 26 வயதில் விக்னேஷ் என்ற மகன் உள்ள நிலையில் இருவரும் சேர்ந்து பெயிண்டிங் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது நாகராஜனுக்கு உடன் வேலை பார்க்கும் மேலகண்டமங்கலம் பகுதியை சேர்ந்த 54 வயதான முத்துக்குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் முத்துக்குமார் மற்றும் நாகராஜன் இணைந்து நாகராஜன் வீட்டில் மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். அதே போல் நேற்று காலை முத்துக்குமார் நாகராஜன் வீட்டிற்கு மது அருந்த வந்துள்ளார் பின்னர் நாகராஜன் மற்றும் முத்துக்குமார் வீட்டிற்கு உள்ளே அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
குடி போதை தலைக்கு ஏறிய நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி மாறி பேசிக்கொண்ட நிலையில் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து நாகராஜனை குத்த முயற்சித்துள்ளார். சரியாக அந்த நேரத்தில் வெளியில் சென்ற விக்னேஷ் வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் தனது தந்தையை குத்த முயற்சித்த முத்துக்குமாரை தடுத்து அவரிடம் இருந்த கத்தியை விக்னேஷ் பறித்துள்ளார். பிறகு அதே கத்தியை வைத்து முத்துக்குமாரை விக்னேஷ் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த முத்துக்குமார் அதிக ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். முத்துக்குமார் உயிரிழந்ததை அறிந்த விக்னேஷ் மற்றும் அவரது தந்தை நாகராஜ் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
மாலை நாகராஜன் வீட்டிற்கு அருகில் வசிக்கும் நாகராஜனின் உறவினரான மாரியம்மாள் விக்னேஷை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது முத்துக்குமார் உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசில் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தப்பி சென்ற விக்னேஷ் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். விக்னேஷை கைது செய்த போலீசார் அவரை மட்டும் தான் இந்த கொலையை செய்தாரா? இல்லை நாகராஜனுக்கு இதில் தொடர்புள்ளதா என விசாரித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.