

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள சீலம்பூரில், மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகித்த கணவர், குடும்பத் தகராறின் போது கத்திரிக்கோலால் சரமாரியாக குத்திக்கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவான கணவனை, உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் ரயில் நிலையம் அருகே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த சந்தேகமும், தொடர்ச்சியான வாக்குவாதங்களும் இறுதியில் கொலையாக மாற்றியிருப்பதாக தெரிகிறது.
காவல்துறையினர் கொடுத்த தகவலின்படி, கொலைசெய்யப்பட்ட பெண்ணுக்கு 45 வயது. அவரது கணவர் சலீமுக்கு 52 வயது. இருவரும் வடகிழக்கு டெல்லியின் கௌதம்புரி பகுதியில் வசித்து வந்துள்ளனர். கணவன்-மனைவிக்குள் கடந்த சில மாதங்களாக அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டதாகவும், அதற்கு முக்கிய காரணம் மனைவியின் நடத்தை மீது கணவருக்கு இருந்த சந்தேகம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை 16-ஆம் தேதி மாலை சுமார் 7.32 மணியளவில், கௌதம்புரியில் உள்ள வீட்டில் பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சீலம்பூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை மீட்டு ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சீலம்பூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு குற்றப்பிரிவு போலீசார் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். வீட்டிலிருந்து பல்வேறு தடயங்கள் சேகரிக்கப்பட்டதுடன், சுற்றுப்புறங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.
விசாரணையின் தொடக்கத்திலேயே, சம்பவத்துக்குப் பிறகு சலீம் வீட்டில் இல்லாதது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது செல்போன் தகவல்கள், சிசிடிவி பதிவுகள், தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் ரகசிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு, உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் ரயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த சலீமை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சலீமிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆடைத் தொழிற்சாலையில் தன்னுடன் பணிபுரிந்த ஒருவருடன் தனது மனைவிக்கு முறையற்ற உறவு இருப்பதாக நீண்ட நாட்களாக சந்தேகித்ததாகவும், அதுதான் குடும்பத்தில் அடிக்கடி தகராறுக்கு காரணமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்ததாக காவல்துறை கூறியுள்ளது. சம்பவம் நடந்த நாளிலும் இதே விவகாரம் தொடர்பாக இருவருக்கும் மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த சலீம், வீட்டில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து மனைவியை பலமுறை குத்தியதாகவும், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பின்னர் வீட்டைப் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்திரிக்கோல் மற்றும் சம்பவத்தின் போது அணிந்திருந்த இரத்தக்கறை படிந்த ஆடைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தடயவியல் பரிசோதனைக்காக அவை அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் மேலும் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடும்பத் தகராறு, சந்தேகம் மற்றும் கோபம் ஆகியவை இணைந்து ஒரு உயிரைப் பறித்துள்ள இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், சேகரிக்கப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.