அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளிச் சகோதரர்களான பாஸ்கர் சவானி (60) மற்றும் அருண் சவானி (58) ஆகியோர், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வந்த பிரம்மாண்டமான மோசடி சாம்ராஜ்யம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. விசா மோசடி, மருத்துவக் காப்பீடு ஏமாற்று வேலை, பணமோசடி எனப் பல குற்றச்சாட்டுகளில் இவர்கள் குற்றவாளிகள் என கடந்த மார்ச் 9, 2026 அன்று அமெரிக்க நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. 'சவானி குரூப்' என்ற பெயரில் ஒரு நிறுவனக் கூட்டமைப்பை உருவாக்கி, அதன் மூலம் சுமார் 32 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 250 கோடி ரூபாய்) முறைகேடாகச் சம்பாதித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
பல் மருத்துவரான பாஸ்கர் சவானி, தனது மருத்துவ அறிவைப் பயன்படுத்தி அரசுத் திட்டங்களையே ஏமாற்றியுள்ளார். ஏழை எளிய மக்களுக்கான 'மெடிகேட்' (Medicaid) காப்பீட்டுத் திட்டத்தில் முறைகேடு செய்து, பினாமி பெயர்களில் கிளினிக்குகளை நடத்தி அரசுப் பணத்தைச் சுருட்டியுள்ளனர். ஒரு மருத்துவர் அமெரிக்காவில் இல்லாத நேரத்திலும், அவரது அடையாள எண்ணைப் பயன்படுத்தி போலியான மருத்துவக் கட்டணங்களை அரசுக்கு அனுப்பிப் பணம் பெற்றுள்ளனர். இதைவிடக் கொடுமையாக, 'மனிதர்களுக்குப் பயன்படுத்தக் கூடாது' என்று எச்சரிக்கை செய்யப்பட்ட தரமற்ற பல் மருத்துவ உபகரணங்களை நோயாளிகளுக்குத் தெரியாமலேயே அவர்களுக்குப் பொருத்திப் பெரும் ஆபத்தை விளைவித்துள்ளனர்.
இவர்களது மோசடிகள் இத்துடன் நின்றுவிடவில்லை. இந்தியாவிலிருந்து எச்-1பி (H-1B) விசா மூலம் பணியாளர்களை வரவழைத்து, அவர்களின் குடியேற்றத் தகுதி தன்னிடம் இருப்பதைச் சாதகமாக்கி அவர்களிடம் விசா கட்டணம் மற்றும் சம்பளத்தில் ஒரு பகுதியைத் திரும்பப் பெற்றுச் சுரண்டியுள்ளனர். இவ்வாறு சட்டவிரோதமாக வந்த பணத்தை மறைக்கப் பல வங்கிப் கணக்குகளைத் தொடங்கிப் பணமோசடியிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும், தங்களது வீட்டுப் பராமரிப்புச் செலவுகள், சொத்து வரி மற்றும் பிள்ளைகளின் கல்லூரிப் படிப்பிற்கான கல்விக் கட்டணம் போன்ற தனிப்பட்ட செலவுகளை, நிறுவனத்தின் செலவுகள் எனக் கணக்குக் காட்டி அமெரிக்க அரசிடம் வரி ஏய்ப்பு செய்துள்ளனர்.
இந்த மோசடி விவகாரத்தில் மிகவும் திடுக்கிடும் தகவல் என்னவென்றால், இவர்கள் மீது எப்.பி.ஐ (FBI) விசாரணை நடந்து கொண்டிருந்த போதே, அதன் இயக்குநர் காஷ் படேலைச் சந்தித்தது குறித்துச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுத் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றுள்ளனர். ஆனால், இறுதியில் சட்டம் இவர்களைச் சரியாகப் பிடித்துள்ளது. இந்த மெகா மோசடிக்காக பாஸ்கர் சவானிக்கு 420 ஆண்டுகள் மற்றும் அருண் சவானிக்கு 415 ஆண்டுகள் என மொத்தம் 835 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கான இறுதித் தீர்ப்பு வரும் ஜூலை 2026-ல் வழங்கப்பட உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.