“கடன் கொடுத்து பெண்களை உல்லாசத்துக்கு அழைத்த ஜானி” - கிணற்றில் மிதந்த சடலம்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!

தனது செல்போனிலிருந்து தவறான எண்கள் மூலம் பெண்களைத் தொடர்புகொண்டு, குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாகக் கூறி..
Melmaruvathur Woman Murder Case
Melmaruvathur Woman Murder Case
Published on: 
Updated on: 
2 min read

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் அருகே விவசாயக் கிணற்றில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், கடன் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக அவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர். குறைந்த வட்டியில் கடன் தருவதாகக் கூறி பெண்களைத் தொடர்புகொண்டு, பின்னர் அவர்களிடம் அதிக வட்டி கேட்டு மிரட்டியதாகக் குற்றம்சாட்டப்படும் நபர், கடன் பாக்கியான ரூ.50,000-க்காக இந்தக் கொலையைச் செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுநாகலூர் பகுதியில் மணவாள நாயுடு என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணறு உள்ளது. இந்தக் கிணற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக மேல்மருவத்தூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்வுக்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தக் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளியைக் கண்டறிந்து கைது செய்வதற்காக ஒரு துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் நான்கு காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகளை அமைத்துத் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கிணற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவர் சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய மணிமேகலை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது செல்போன் எண்கள் மற்றும் தொடர்புகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

அப்போது, கடலூர் மாவட்டம், எம்.ஜி.ஆர். திட்டு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய மதுரவேல் என்ற ஜானி அன்புதாஸ் என்பவர் மீது போலீசாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவரைப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கடன் விவகாரத்தில் மணிமேகலை கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் வெளியாகின. போலீஸ் விசாரணையின் படி, மதுரவேல் தனது செல்போனிலிருந்து தவறான எண்கள் மூலம் பெண்களைத் தொடர்புகொண்டு, குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாகக் கூறி வந்துள்ளார்.

குறிப்பாக, கணவரால் கைவிடப்பட்ட மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பெண்களைக் குறிவைத்து, அவர்களுக்கு உதவி செய்வது போலப் பழகியதாகக் கூறப்படுகிறது. பின்னர், கடனாக வழங்கிய பணத்திற்கு அதிக வட்டி கேட்டு மிரட்டுவதுடன், பெண்களைத் தனிப்பட்ட முறையில் உல்லாசத்துக்கு அழைத்து தொல்லை கொடுத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதேபோல், மதுரவேலிடம் மணிமேகலை தனது குடும்பச் செலவுகளுக்காக ரூ.1.50 லட்சம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

அதற்கான வட்டியைத் தொடர்ந்து செலுத்தி வந்த அவர், கடன் தொகையில் ரூ.1 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளார். மீதமிருந்த ரூ.50,000-ஐச் செலுத்த முடியாமல் சில நாட்கள் அவகாசம் கேட்டதாகத் தெரிகிறது. மீதமுள்ள பணத்தைப் பெறத் திட்டமிட்ட மதுரவேல், மணிமேகலைக்குச் சந்தேகம் ஏற்படாத வகையில் புதிய செல்போன் எண்ணிலிருந்து அவரைத் தொடர்புகொண்டதாகக் கூறப்படுகிறது. மீண்டும் கடன் தேவைப்படுகிறதா எனக் கேட்டு, அவரை மேல்மருவத்தூருக்கு வரவழைத்துள்ளார்.

அவரது அழைப்பை நம்பி மேல்மருவத்தூர் வந்த மணிமேகலையைத் தனிமையான பகுதிக்கு அழைத்துச் சென்ற மதுரவேல், அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மூக்குத்தி மற்றும் கம்மல் ஆகிய நகைகளைக் கழற்றி கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிமேகலையின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர், கொலையை மறைக்கும் நோக்கில் அவரது சடலத்தை அருகிலிருந்த விவசாயக் கிணற்றில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரவேலைக் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடனாகப் பெற்ற தொகையில் பெரும்பகுதியைத் திருப்பிச் செலுத்திய நிலையிலும், மீதமிருந்த ரூ.50,000 தொடர்பான தகராறில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த வட்டியில் கடன் தருவதாகக் கூறி அறிமுகமாகும் நபர்களிடம் பணம் பெறும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் இச்சம்பவம் உணர்த்துகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com