“தென்காசியில் அடுத்தடுத்து நடந்த அரிவாள் வெட்டு” - நள்ளிரவில் கொல்லப்பட்ட மாற்றுத்திறனாளி.. கணவரை பார்த்து கதறி துடித்த மனைவி!

அருகில் சென்ற போது அங்குள்ள பாலத்தில் மறைந்திருந்த மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்த....
“தென்காசியில் அடுத்தடுத்து நடந்த அரிவாள் வெட்டு” - நள்ளிரவில் கொல்லப்பட்ட மாற்றுத்திறனாளி.. கணவரை பார்த்து கதறி துடித்த மனைவி!
Published on
Updated on
2 min read

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள நெல்கட்டும்செவல் பச்சேரி கிராமம் கீழ பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் 48 வயதுடைய சங்கரலிங்கம். மாற்றுத்திறனாளியான இவருக்கும் இவரது உறவினர்களுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்தவர்களும் புளியங்குடி காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் புகார் அளித்துள்ள நிலையில் இரு தரப்பினர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சங்கரலிங்கம் மற்றும் அவரது மனைவியான 40 வயதுடைய சுப்பு தாய் ஆகிய இருவரும் நேற்று நல்லூருக்கு சென்று விட்டு மீண்டும் தனது ஊருக்கு இருசக்கர வாகனத்தில் இரவில் சுமார்9.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தனர். பச்சேரி கிராமத்திற்கு திரும்பும் வழியான சுடுகாட்டு விலக்கு அருகில் சென்ற போது அங்குள்ள பாலத்தில் மறைந்திருந்த மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் -மனைவியை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த கணவர் சங்கரலிங்கம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மனைவி சுப்பு தாய்யின் அலறல் சத்தம் கேட்டு அவர்களை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து உடனடியாக புளியங்குடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மனைவி சுப்புத்தாயை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Admin

இதனை தொடர்ந்து பலியான சங்கரலிங்கத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த். புளியங்குடி டிஎஸ்பி மீனாட்சி நாதன் சங்கரன்கோவில் டிஎஸ்பி செங்குட்டுவன் ஆகியோர் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

தென்காசி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் ஆலங்குளம் நெட்டூர் கிராமத்தில் இரவு காவல் பணியில் இருந்த தலைமை காவலரை வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனை தொடர்ந்து இன்று புளியங்குடி அருகே கணவன் மனைவியை வழிமறித்து வெட்டிய சம்பவத்தில் கணவன் உயிரிழந்த சம்பவம் தென்காசி மாவட்டம் மக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com