

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள கோடிமுனை பகுதியைச் சேர்ந்தவர் சுனிதா வருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. எனவே சுனிதா பேருந்து நிலைய வணிக வளாகத்தில் துணிக்கடை நடத்தி இரண்டு குழந்தைகளையும் கைப்பற்றி வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சுனிதாவிற்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. அருகில் உள்ள கிளினிக் சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது.
எனவே சுனிதா உடல் நலக்குறைவால் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். அப்போது அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோடிமுனை பகுதியை சேர்ந்த மீனவர் ஜெரால்டு ராபர்ட் என்பவரிடம் மருத்துவ தேவைக்காக சுனிதா மூன்று ஆயிரத்து 500-ரூபாய் பணத்தை கடனாக பெற்றிருக்கிறார். பின்னர் குணமாகி வீடு திரும்பிய சுனிதா ஜெரால்டு ராபர்ட் இடம் வாங்கிய பணத்தை அவரிடம் மீண்டும் கொடுத்திருக்கிறார்.
ஆனால் சுனிதா பணம் செலுத்திய பிறகும் ஜெரால்டு ராபர்ட் அவரை போனில் தொடர்பு கொண்டு தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். மேலும் தினமும் சுனிதாவிற்கு காதல் மெசேஜ் அனுப்பி டார்ச்சர் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. பலமுறை கூறியும் ஜெரால்டு ராபர்ட் தொடர்ந்து மெசேஜ் மற்றும் போன் செய்து வந்திருக்கிறார். எனவே அவரது தொல்லை தங்க முடியாத சுனிதா தனது செல்போன் எண்ணை மாற்றியிருக்கிறார். இது தெரியாமல் பலமுறை ஜெரால்டு ராபர்ட் சுனிதாவின் பழைய எண்ணிற்கு தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார்.
போன் எடுக்காததால் ஆத்திரமடைந்த ஜெரால்டு ராபர்ட் இளம்பெண் சுனிதா தனது இரு குழந்தைகளுடன் வெள்ளிக்கிழமை அன்று கடையில் இருந்த போது கடைக்கு சென்று சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடியுள்ளார். இதில் படுகாயமடைந்த சுனிதா சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் புகாரின் அடிப்படையில் ஜெரால்டு ராபர்ட் மீது பெண் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குளச்சல் போலீசார் அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.