

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கூட்டுமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வினோ. பிளம்பரான இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ரம்யா என்பவருடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் ஒரு குழந்தை உள்ளதாக சொல்லப்படுகிறது. வினோ மணவாளக்குறிச்சி சக்கப்பத்து பகுதியில் பிளம்பிங் வேலைக்கு சென்ற போது அந்த பகுதியை சேர்ந்த பிரபா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவரது கணவரான கண்ணன் என்பவர் வெளிநாட்டில் தங்கி வேலை பார்ப்பதாக சொல்லப்படுகிறது.
பின்னர் இருவரும் மாறி மாறி செல்போன் எண்களை பரிமாரிக் கொண்ட நிலையில் இருவரும் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவதோடு விடிய விடிய வீடியோ காலில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இரவு முழுவடிகும் கணவர் தூங்காமல் வேறு ஒரு பெண்ணுடன் வீடியோ காலில் பேசுவதை கண்டுபிடித்த பிளம்பர் வினோவின் மனைவி ரம்யா, கண்ணனின் மனைவி பிரபாவை தொடர்பு கொண்டு “தனது கணவருடன் பழகுவதை நிறுத்துமாறும் அப்படி இல்லை என்றால் வீடியோ கால் பேசுவதை உனது கணவரிடம் சொல்லிவிடுவேன்” என கண்டித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் இருவரும் வீடியோ காலில் பேசியுள்ளனர். இதனை பார்த்து ஆத்திரமடைந்த ரம்யா பிளம்பரான தனது கணவர் வினோவை கையோடு பிரபா வீட்டிற்கு அழைத்து சென்றதோடு அங்கிருந்த பிரபாவின் கணவர் கண்ணனிடம் நடந்த சம்பவத்தை கூறி அவரது மனைவி பிரபாவை கண்டிக்குமாறு கூறியுள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த கண்ணன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பிளம்பர் வினோவின் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதனால் தலையில் பலத்த காயமடைந்த பிளம்பர் வினோ சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வினோவின் மனைவி ரம்யா அளித்த புகாரின் அடிப்படையில் கண்ணன் அவரது மனைவி பிரபா ஆகிய இருவர் மீதும் தகாத வார்த்தைகள் பேசியாது, அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தது என 4-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மணவாளக்குறிச்சி போலீஸ் தலைமறைவான கண்ணன் பிரபா தம்பதியரை தேடி வருகின்றனர். இளம் பெண்ணுடன் விடிய விடிய வீடியோ காலில் பேசிய பிளம்பருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.