

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே உள்ள வடக்கு பேயன்குழி பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி ராஜன். இவர் மீது ஏற்கனவே மூன்று கொலை வழக்குகள் உள்ள நிலையில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குளச்சல் பகுதியை சேர்ந்த அருள்பாபி என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்திருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த ராஜன் திருமணமாகாத நிலையில் தங்க வீடு இன்றி வடக்கு பேயன்குழி பகுதியில் உள்ள அம்மன் கோவில் கலையரங்கத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
எந்த வேலைக்கும் செல்லாமல் எப்போதும் அம்மன் கோவில் கலையரங்கத்தில் தங்கியிருந்த ராஜன் அந்த வழியாக செல்லும் பெண்களிடம் அவர்களை கிண்டல் செய்வது, அநாகரிகமாக நடந்து கொள்வது, தேவையற்ற சைகைகளை காட்டுவது என தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அப்பகுதி மக்கள் ராஜனை கண்டித்த நிலையும் அவர் தொடர்ந்து பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ராஜன் நேற்று இரவு தனது பெரியப்பா மகனான அண்ணன் கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு சாப்பாடு கேட்டு சென்றிருக்கிறார்.
அங்கு வீட்டில் யாரும் இல்லாமல் கோபாலகிருஷ்ணனின் மனைவி மட்டும் தனியாக இருந்த நிலையில் அவரிடம் அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது. இதனை கோபாலகிருஷ்ணன் மனைவி அவரிடம் தெரிவித்த நிலையில் ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன் இன்று அதிகாலை கலையரங்கத்தில் படுத்துறங்கிய ராஜனை கட்டையால் தலையில் அடித்தும் முகத்தை சிதைத்து கொலை செய்துவிட்டு காவல்துறையில் சிக்காமல் இருக்க தப்பித்து சென்றுள்ளார். காலையில் ராஜனின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரணியல் போலீசார் கொலை செய்யப்பட்ட ராஜன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலை செய்து விட்டு தப்பி சென்ற கோபாலகிருஷ்ணனை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மனைவியிடம் அத்துமீற முயற்சித்த தம்பியை அண்ணன் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.