“14 வயது சிறுமியை கடத்திய தாய்மாமன்” - தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை.. யாசகம் எடுக்க வைத்து பணம் சம்பாதிக்க திட்டமா?

சிறுமி குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால், மறுநாள் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்...
Kulachal Minor Girl
Kulachal Minor Girl
Published on: 
Updated on: 
1 min read

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிலர் குடும்பம் குடும்பமாகச் சுற்றித் திரிந்து யாசகம் பெற்று வருகின்றனர். இவர்கள் இரவு நேரங்களில் குளச்சல் காவல் நிலையம் எதிரே செயல்பட்டு வரும் ஆவின் பாலகம் அருகே தங்குவது வழக்கம். இந்த நிலையில், கடந்த 15-ம் தேதி மாலை மிடாலம் உதயமார்த்தாண்டம் நடுத்தேரி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர், தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் குளச்சல் பகுதியில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காணச் சென்றுள்ளார்.

நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு குடும்பத்தினர் வழக்கமாகத் தங்கும் ஆவின் பாலகம் பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது சாலையோரம் நின்று விளையாடிக் கொண்டிருந்த சரவணனின் 14 வயது மகள் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், பல்வேறு இடங்களில் தேடியதுடன், உறவினர்கள் வசிக்கும் பகுதிகளிலும் விசாரித்துள்ளனர். ஆனால் சிறுமி குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால், மறுநாள் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் சிறுமி மாயமானதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமியின் தாய்மாமன் முறையான இசக்கியப்பன் என்பவர், விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது. இதையடுத்து, அவரது செல்போன் இயக்கத்தைக் போலீசார் கண்காணித்து வந்துள்ளனர்.

அப்போது நான்கு நாட்களுக்குப் பிறகு (நவ 19) வியாழக்கிழமை டவர் லொக்கேஷன் உதவியுடன் அவர் கோவில்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருப்பதைக் கண்டறிந்தனர். உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியைப் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து இசக்கியப்பனை குளச்சல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், இசக்கியப்பனுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதும், சிறுமியைக் கடத்திச் சென்று தனது தங்கை வீட்டில் தங்க வைத்திருந்ததும் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், சிறுமியை யாசகத்தில் ஈடுபடுத்தும் நோக்கத்துடன் கடத்தி சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிறுமியைக் கடத்திச் சென்று யாசகத்தில் ஈடுபடுத்த முயன்றது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் இசக்கியப்பன் மீது வழக்குப்பதிவு செய்த குளச்சல் போலீசார், அவரைக் கைது செய்தனர். பின்னர் இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் மாவட்டச் சிறையில் அடைத்தனர். சிறுமியை அவரது தாய்மாமன் முறையானவரே கடத்திச் சென்று யாசகத்தில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.