“குழந்தைகளுக்கு சூடு வைத்து சித்ரவதை” - கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாய் செய்த செயல்.. இப்படியும் ஒரு அம்மாவா?

குழந்தைகளுடன் கடந்த இரண்டு மாதங்களாக ரஞ்சித்குமாருடன் சுகன்யா வசித்து வந்ததாகத் தெரிகிறது...
Kanyakumari Child Abuse Case
Kanyakumari Child Abuse Case
Published on: 
Updated on: 
2 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில், இரு குழந்தைகளைத் தாக்கி காயப்படுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், குழந்தைகளின் தாய் மற்றும் அவருடன் வசித்து வந்த கள்ளக்காதலன் ரஞ்சித்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஈத்தாமொழி பகுதியை சேர்ந்தவர் சுகன்யா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

எனவே குடும்பத் தகராறு காரணமாகக் சில மாதங்களுக்கு முன்பு கணவரைப் பிரிந்த சுகன்யா, தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ள நைனாபுதூரைச் சேர்ந்த 29 வயதான ரஞ்சித்குமாருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரஞ்சித்குமார் தூய்மை  பணியாளர்களின் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்த நிலையில் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி பழகி வந்திருக்கின்றனர். பின்னர் நாளடைவில் இவர்களது பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இதையடுத்து, தனது இரு குழந்தைகளுடன் கடந்த இரண்டு மாதங்களாக ரஞ்சித்குமாருடன் சுகன்யா வசித்து வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சுகன்யா தனது இரு குழந்தைகளையும் பள்ளி விடுமுறை காரணமாக அவரது தம்பி வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். அப்போது குழந்தைகளின் கை, கால், வயிறு மற்றும் தொடை உள்ளிட்ட பகுதிகளில் ரத்த காயங்கள் மற்றும் சூடு வைத்த காயம் இருந்ததைக் கண்டு அவரது தம்பி அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து குழந்தைகளிடம் விசாரித்தபோது, தாய் சுகன்யாவும் ரஞ்சித்குமாரும் சேர்ந்து தங்களைத் தாக்கியதாகக் குழந்தைகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, குழந்தைகளைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து சுகன்யாவின் தம்பி அவரை தட்டிக்கேட்டபோது, அவருக்கு சுகன்யா மற்றும் ரஞ்சித் குமார் இருவரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இதுதொடர்பாக சுகன்யாவின் தம்பி சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குழந்தைகளின் தாய் சுகன்யா மற்றும் அவரது கள்ளக்காதலன் ரஞ்சித்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகள் தாக்கப்பட்டதாக எழுந்த புகாரும், அவர்களது தாயே இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படுவதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com