“தாய்மாமனின் ஆசை வார்த்தையில் சிக்கிய சிறுமி.. கர்ப்பமாக்கிய கொடூரம்!” - குழந்தையை மறைக்க முயன்ற தாய்?

குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சிறுமியின் தாயார் கொடுத்த அறிவுரையின் பேரில் அந்தக் குழந்தை
Theni POCSO Case
Published on
Updated on
1 min read

தேனி மாவட்டத்தில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தாய்மாமனுக்கு, போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட குழந்தைகள் பாலியல் குற்ற தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, அவரது தாய் மாமனான 27 வயதான முகேஷ் திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தின் விளைவாக அந்தச் சிறுமி கர்ப்பமடைந்து, கடந்த 2023 அக்டோபர் 13-ஆம் தேதி பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சிறுமியின் தாயார் கொடுத்த  அறிவுரையின் பேரில் அந்தக் குழந்தை முதலில் வேறொருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், குழந்தையை தொடர்ந்து பராமரிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், குழந்தை நலப் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சிறுமி அளித்த தகவல்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த 2023 நவம்பர் 27-ஆம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, முகேஷை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட குழந்தைகள் பாலியல் குற்ற தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ச. எழில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முகேஷுக்கு போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தத் தவறினால் கூடுதலாக மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் இரண்டாவது எதிரியாக சேர்க்கப்பட்டிருந்த சிறுமியின் தாயாருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில், குற்றவாளியிடம் வசூலிக்கப்படும் ரூ.10,000 அபராதத் தொகையை கழித்த பின்னர், மீதமுள்ள ரூ.4.90 லட்சத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சிறுமியின் பெயரில் நிரந்தர வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்றும், அவர் வயது வந்த பின்னர் அந்தத் தொகையை நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

தீர்ப்புக்குப் பிறகு, குற்றவாளி முகேஷை காவல்துறையினர் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் சென்றனர். இந்த தீர்ப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்பதற்கான முக்கிய எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com