கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் 23 வயதான அர்ஜுன். இவர் ஓசூரில் உள்ள ராஜகணபதி நகரில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். தொடர்ந்து வேலைக்கு செல்லும் அர்ஜுன் ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் அர்ஜுனின் முதலாளி அவரின் தந்தைக்கு போன் செய்து அர்ஜுனை குறித்து விசாரித்துள்ளார்.
இது குறித்து அர்ஜூனுடன் அறையில் தங்கியிருந்த கண்ணன் என்பவருக்கு போன் செய்து விசாரித்துள்ளார் அவரின் தந்தை. அப்போதுதான் கண்ணன் “அவன் எங்கே என்றே தெரியல அப்பா.. கிட்டத்தட்ட 20 நாளா வீட்டுக்கே வரல நான் அவன் நம்ம வீட்டுக்கு வந்திருப்பான்னு நெனச்சேன்” என கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அர்ஜுனின் தந்தையும் கண்ணனும் இது குறித்து போலீசில் புகாரளித்துள்ளனர். விசாரணை மேற்கொண்ட போலீசார் அர்ஜுனின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்படுவதற்கு முன் யாரிடம் எல்லாம் பேசியிருக்கிறார், என்ற தகவலை சேகரிக்க தொடங்கியுள்ளனர்.
அதில் அர்ஜுன், சாகுல் அமீது என்பவரிடமும் இப்ராஹிம் என்பவரிடமும் அதிக முறை பேசியுள்ளார். இவர்களை விசாரித்ததில் இப்ராஹிம் என்பவர் அர்ஜுனோட நெருங்கிய நண்பர் என்பதும் இவர்கள் இருவரும் சிறு வயதிலிருந்தே ஒன்றாக வளர்த்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் சாகுல் அமீது என்பவர் தற்போது இப்ராஹிமுடன் ஒரு வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
உடனடியாக சாகுல் அமீத்திடம் விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. சாகுல் அமீது “நானும் இப்ராஹிமும் ஒரே வீட்டுலதான் தங்கியிருந்தோம். என்னோட பணம் 40,000 ரூபாய் காணாம போயிடுச்சி. இப்ராஹிம் தான் எடுத்திருப்பானோன்னு நெனச்சி நான் அவனை போட்டு அடிச்சிட்டேன். இதனை தெரிஞ்சிகிட்ட அர்ஜுன் வந்து அவனை(இப்ராஹிமை)அடிச்சதுக்கு என்னை போட்டு சரமாரியாக அடிச்சிட்டான்.
இதனால் நானும் என்னோட நண்பர்களும் சேர்ந்து அர்ஜுனை கொலை செய்ய முடிவு செஞ்சோம்! காரை வாடகைக்கு எடுத்து அவனோட வீட்டுக்கு வெளிய நின்னுட்டு இருந்த அர்ஜுனை கடத்தி கார்லையே வச்சு கொலை செஞ்சோம்! உடலை எங்க புதைக்கிறதுனு தெரியாம இரவு முழுவதும் கார்க்குள்ளையே வச்சு சுத்திட்டு இருந்தோம்.
அப்போதான் சூளகிரியை அடுத்த சின்னார் என்ற பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வனப்பகுதி ஒட்டிய ஒரு காலியிடம் எங்க கண்ணுல பட்டுச்சு அதில் குழி தோண்டி அர்ஜுனை புதைச்சிட்டோம்” என கூறியுள்ளார். குற்றவாளியையும் அவருடன் கொலை செய்த முக்கிய நண்பரையும் கூட்டிக்கொண்டு சூளகிரிக்கு சென்ற காவல்துறையினர்.
அர்ஜுனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சாகுல் அமீது மற்றும் அவர்களின் நண்பர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்