
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அடுத்துள்ள மோட்டூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் 24 வயதான ஈஸ்வரி. இவருக்கும் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த நாகேஷ் என்ற நபருக்கும் திருமணம் நடந்து இருவரும் அங்குள்ள நிலமங்கள என்ற பகுதியில் தனியார் செங்கல் சூளையில் தங்கி பணியாற்றி வந்துள்ளனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஈஸ்வரி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாகேஷிடம் சண்டை போட்டுக் கொண்டு கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக கிருஷ்ணகிரிக்கு வந்தார்.
பின்னர் ஈஸ்வரி தனது குழந்தைகளுடன் ராயக்கோட்டை மேம்பாலம் அடிவாரத்தில் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கியுள்ள தனது தந்தை கோபி மற்றும் உறவினர் குடும்பத்தாருடன் சேர்ந்து தங்கியுள்ளார். இந்த நிலையில் (ஆக 30) பிற்பகல் 2 மணிக்கு சுமார் 35 வயதுடைய பெண் ஒருவர் ஈஸ்வரியை நோட்டமிட்டு அவரிடம் நைசாக வந்து பேச்சுக் கொடுத்து “எனக்கு ஜாதகத்தில் தோஷம் இருக்கிறது, அந்த தோஷம் நீங்க வேண்டும் என்றால் ஏழை பெண் குழந்தைக்கு டிரஸ் வாங்கி கொடுக்க வேண்டும்” என கூறி ஈஸ்வரி மற்றும் அவரது ஆறு மாத பச்சிளம் குழந்தையை கிருஷ்ணகிரி ரவுண்டான அருகே உள்ள துணி கடைக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு குழந்தைக்கு புதிய துணிகள் மற்றும் அலங்கார பொருட்களை வாங்கி கொடுத்து மீண்டும் அதே ஆட்டோவில் அவர்களை அழைத்து வந்து கூடாரத்தில் விட்டுச் சென்றுள்ளார், மீண்டும் மாலை 6:00 மணியளவில் அங்கு வந்த பெண் ஈஸ்வரிடம் “உனது குழந்தை மிகவும் அழகாக உள்ளது எனக்கு குழந்தையை கொஞ்ச வேண்டும் எனவும் குழந்தையுடன் செல்பி போட்டோ எடுத்துக் கொள்ளட்டுமா” என்று கூறி ராயக்கோட்டை மேம்பாலம் அருகே உள்ள கலைஞர் சிலை பகுதிக்கு குழந்தையை எடுத்துச் சென்றுள்ளார். அங்கு கலைஞர் சிலை மீது ஏறி குழந்தையுடன் போட்டோ எடுத்துக்கொண்ட பெண் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு குழந்தையை கொண்டு சென்று விட்டு வருவதாக தெரிவித்து ஈஸ்வரி வெளியே காத்திருக்க அவர் மட்டும் குழந்தையுடன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
நீண்ட நேரம் கோயிலுக்கு அருகில் காத்திருந்த ஈஸ்வரி குழந்தையுடன் சென்ற பெண்ணை காணவில்லை என தேடிய போது தான் தனது குழந்தை கடத்தப்பட்டு உள்ளது என்பதை அறிந்துள்ளார். இதனை தொடர்ந்து ஈஸ்வரி அழுது புலம்புவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரிடம் விசாரிக்கும் பொழுது பெண் ஒருவர் தனது குழந்தையை கடத்திச் சென்றது குறித்து தெரிவித்தார். மேலும் இதுகுறித்து ஈஸ்வரி கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆதாரமாக கொண்டு குழந்தையை கடத்திச் சென்ற பெண் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அந்த பெண் துணிக்கடையில் GPAY செய்த எண்ணின் சிக்னல் வைத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த குழந்தையை மீட்டு ஈஸ்வரியிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் அந்த பெண்ணுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்து உயிரிழந்த நிலையில் அவர் இவ்வாறான செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மக்கள் நடமாட்டம் நிறைந்த மாலை பகுதியில் தாயினை ஏமாற்றி பெண் ஒருவர் குழந்தையை கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.