

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் முருகேசன் என்பவர் கடந்த சில மாதங்களாக மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவதும், பாலியல் சீண்டலில் ஈடுபடுவதும், மாணவிகளை தொடுவது போன்ற செயலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள் குறித்து ஏற்கனவே கலந்தாய்வு வழங்கப்பட்ட நிலையில் தங்களுக்கு நேர்ந்து வரும் பாலியல் சீண்டல் குற்றங்கள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் தங்களது பெற்றோர்களிடம் தெரிவிக்க பயந்த பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் “தங்களுக்கு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் முருகேசன் தொட்டு பள்ளியில் சீண்டல் செய்வதும் தேவையற்ற இரட்டை அர்த்தம் தரும் வார்த்தைகளை பேசியும் தொல்லை கொடுக்கிறார்” என கடிதம் எழுதி புகார் பெட்டியில் போட்டிருக்கின்றனர்.
ஆனால் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் புகார் பெட்டியை முறையாக திறந்து பார்க்காததால் மாணவிகளின் குற்றச்சாட்டு பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் நிர்வாகத்திற்கும் தெரியாமல் இருந்துள்ளது. இதனால் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாணவிகள் வேறு வழி தெரியாமல் தங்களது பெற்றோர்களிடம் ஆசிரியர் குறித்து தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தை பாதுகாப்பு உதவி எண்ணுக்கு போன் செய்து புகார் அளித்தனர்.
தகவல் அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் இது குறித்து பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முருகேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் புகார் பெட்டியை சரிவர திறந்து பார்க்காமல் நடவடிக்கை எடுக்காமல் இருந்த தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வி துறைக்கு பரிந்துரை செய்துள்ளனர். அரசு பள்ளியில், அரசு ஆசிரியரே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.