
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தை சேர்ந்தவர் 48 வயதுடைய செல்வராஜ் டிரைவரான இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். அதே போல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அடுத்த நக்கல்பட்டி கிராமத்தை சேர்ந்த குணசேகர் என்பவரது மனைவி 23 வயதான காயத்ரி இவர்களுக்கு சுஜன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. குணசேகரனின் நண்பராக இருந்த டிரைவர் செல்வராஜுக்கும் குணசேகரனின் மனைவி காயத்திற்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அடிக்கடி குணசேகரனை பார்க்க செல்வராஜூ அவரது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது காயத்ரிக்கும் செல்வராஜுக்கும் இடையே இருந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. குணசேகரனால் இவர்களின் உறவுக்கு பாதிப்பு வரக்கூடாது என இவர்கள் இருவரும் சேர்ந்து ஒசூர் அருகே காந்திநகர் வானவில் நகர் 2வது தெருவில் வாடகைக்கு வீடு எடுத்துள்ளனர். இந்த வீட்டிற்கு ஓரு ஆண்டாக அவ்வப்போது சென்று இருவரும் தங்கி வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை இருவரும் அந்த வீட்டுக்குள் உயிரிழந்து கிடப்பதாக ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அப்பகுதிக்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தி உள் பக்கமாக பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு காயத்ரி உயிரிழந்து கிடந்துள்ளார் அவரது கைகளில் காயங்கள் இருந்துள்ளன, அவரது அருகே தலையணையும் இருந்துள்ளது. வீட்டின் படுக்கை அறையில் செல்வராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கிடந்தார். அதனைத் தொடர்ந்து இரண்டு பேரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் செல்வராஜ் மற்றும் காயத்ரி ஆகிய இருவரும் கள்ளக்காதல் ஜோடி என்பதும் இருவருக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டதாகவும் இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ் காயத்ரியை தாக்கி, தலையணையை அவரது முகத்தில் அழுத்தி கொலை செய்திருக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது. கொலை செய்ததால் அச்சமடைந்த அவர் குழந்தை சுஜனை அருகில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறி விட்டு வீட்டிற்கு சென்று உள்புறமாக பூட்டி விட்டு படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் இருவரது உறவினர்களுக்கும் தகவல் அளித்துள்ளனர். காயத்ரியின் உடலை பிரேத பரிசோதனை செய்த பின்னர் தான் அவரது இறப்புக்கான காரணம் முழுமையாக தெரியவரும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரே வீட்டில் இருவர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.