

மதுரை மாவட்டம், மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதுடைய பாண்டித்துரை. ஏற்கனவே இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பாண்டித்துரை கடந்த சில நாட்களுக்கு முன்பாக மதுரை செல்லூர் போஸ் வீதி பகுதியைச் சேர்ந்த மணிரத்தினம் என்பவரது தந்தையிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை வழிப்பறி செய்து வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இது குறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில் பாண்டித்துரை வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனை அறிந்த மணிரத்தினம் தனது தந்தையிடம் மிரட்டி வழிப்பறி செய்ததை நினைத்து ஆத்திரமடைந்து பாண்டிதுரையை தனது நண்பர் ராஜகுருவுடன் இணைந்து கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி நேற்று மாலை மதுரை மீனாட்சிபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ள நாடக மேடையில் பாண்டித்துரை உட்கார்ந்து இருப்பதை பார்த்த இருவரும் அங்கு சென்று தகராறு செய்திருக்கின்றனர்.
பின்னர் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பாண்டித்துரையை தலை முகம் நெஞ்சு ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் காயங்களுடன் கிடந்த பாண்டிதுரையை மீட்டு ஆட்டோ மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பாண்டிதுரையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த செல்லூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திய நிலையில் பாண்டித்துரையை கொலை செய்து விட்டு தப்பியோட முயன்ற செல்லூர் போஸ் வீதி பகுதியை சேர்ந்த மணிரத்தினம் மற்றும் அவரது நண்பரான பூந்தமல்லி நகர் பகுதியை சேர்ந்த ராஜகுரு ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். ஒருவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.