
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே வைரவ நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் 23 வயதான திலகா இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன ஒன்றரை வருடங்களுக்கு முன்பு உடல் நல குறைவால் திலகாவின் கணவர் இறந்த நிலையில் திலகா அவரது பெற்றோர் வீட்டின் அருகே வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். கணவனை இழந்து இரண்டு பெண் குழந்தைகளுடன் வசிக்கும் திலகா வேலைக்கு சென்று இரவு வீடு திரும்பும் போதும் இரவு நேரங்களிலும் பக்கத்து வீட்டுக்காரரான 35 வயதுடைய மணிகண்டன் மதுபோதையில் அரை நிர்வாணத்துடன் தகாத ஆபாச வார்த்தைகள் பேசியும், செய்கைகள் காண்பித்தும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.
மேலும் திலகா தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் வேலை முடித்து விட்டு இரவு வீட்டிற்கு வரும் நேரத்தில் அவர் வரும் வழியில் மணிகண்டன் காரை எடுத்து சென்று வழிமறித்து கையை பிடித்து இழுத்து தன்னுடன் தனிமையில் இருக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் மணிகண்டனின் குடும்பத்தில் உள்ள மற்ற ஆண்களும் திலகாவை தங்களுடன் தனிமையில் இருக்க வற்புறுத்தியும் தகாத வார்த்தைகளால் பேசி துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.
இது குறித்து திலகா சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 31ஆம் தேதி தனக்கு பக்கத்து வீட்டுக்காரனான மணிகண்டன் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புகார் அளித்துள்ளார். புகார் கொடுக்கப்பட்டு மூன்று நாட்களாகியும் சமயநல்லூர் போலீசார் புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலும் பொய் புகார் கொடுத்துள்ளதாகவும் சொல்லி திலகாவை அலை கழித்ததாக கூறப்படுகிறது
இந்நிலையில் நேற்று காவல் நிலையத்திற்கு வந்த மணிகண்டன் தான் ஒரு பத்திரிக்கையாளர் எனவும் தனது தாய்மாமன் தி.மு.க ஒன்றிய அவைத்தலைவர் முருகன் அதனால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது எனக்கூறி புகாரை வாபஸ் வாங்குமாறு திலகாவிடம் காவல் நிலையத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதனை தொடர்ந்து சமயநல்லூர் போலீசார் மணிகண்டன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் உள்ளனர்.
இதை பற்றி பேசிய திலகா “மணிகண்டன் வீட்டில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது அதை போலீசார் ஆய்வு செய்தாலே நள்ளிரவில் அவர் செய்த உண்மை நிலை தெரியும். ஆனால் அரசியல் பின்புலம் காரணமாக போலீசார் புகார் குறித்து விசாரிக்காமல் ஆய்வு செய்யாமல் என் மீது புகாரை திசை திருப்ப பார்க்கின்றனர். ஒரு பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வருகிறேன். இதே நிலை தொடர்ந்தால் வருங்காலத்தில் என் குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகத்தான் இருக்கும்” என தெரிவித்துள்ளார்
மேலும் காவல்துறையினர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மணிகண்டன் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் தனது குழந்தைகளுடன் தானும் தற்கொலை செய்வதை விட வேறு வழி இல்லை என கண்ணீர் மல்க திலகா தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.