
மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்த 23 வயதான அல்தாப் செக். அதே பகுதியை சேர்ந்த 19 வயதான ரித்திகா என்ற பெண்ணை ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார்.அல்தாப் காதலுக்கு சம்மதம் தெரிவித்த ரித்திகாவும் அல்தாப்பை காதலித்து வந்துள்ளார். இருவரும் தங்களது காதலை பற்றி வீட்டில் தெரிவித்த நிலையில் இரு வீட்டாரும் இவர்களது காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் தங்களது காதலை கைவிடாத இளம் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
திருமணமான அல்தாப் மற்றும் ரித்திகா, அதே புனே பகுதியில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளனர். கிடைக்கும் கூலி வேலைகளை செய்து அல்தாப் ரித்திகாவை கவனித்து கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் ரித்திகா கர்ப்பமடைந்துள்ளார். தான் கர்ப்பம் ஆனதை காலதாமதமாக தெரிந்து கொண்ட ரித்திகா, இதை பற்றி தனது கணவர் அல்தாபிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அல்தாப் தற்போது இருக்கும் நிலையில் குழந்தையை வளர்க்க முடியாது, என எண்ணி கருக்கலைப்பு செய்ய ரித்திகாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
ரித்திகா கர்ப்பமடைந்து கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் மாதங்கள் ஆன நிலையில், ரித்திகாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கருக்கலைப்பு செய்தால் ரித்திகா உயிருக்கு ஆபத்தாகிவிடும் என தெரிவித்துள்ளனர். இதனால் செய்வதறியாது தங்கள் வழக்கமான வாழ்க்கையை வாழ்ந்து வந்த காதல் ஜோடிகள் வேலை காரணமாக தங்கள் சொந்த ஊருக்கு சென்று வேலையை முடித்து தனியார் ஸ்லீப்பர் பேருந்தில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது பேருந்தில் ரித்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இது மற்ற பயணிகளுக்கு தெரியக்கூடாது என எண்ணிய அல்தாப் ரித்திகாவின் வாயில் துணியை வைத்து அடைத்து அவருக்கு பிரசவம் பார்த்துள்ளார். பின்னர் பிறந்த குழந்தையின் வாயில் துணியை வைத்து அடைத்து மூச்சு பேச்சு இல்லாத குழந்தையை துணியில் சுற்றி பேருந்து ஜன்னல் வழியாக குழந்தையை வெளியில் தூக்கி வீசியுள்ளார். பேருந்து பின்னால் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் பேருந்தில் இருந்து ஏதோ வித்தியாசமாக தூக்கி வீசப்பட்டதை அறிந்து அந்த துணியின் அருகில் சென்று பார்த்துள்ளார்.
அதில் பிறந்த பச்சிளம் குழந்தை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பேருந்தை பின் தொடர்ந்து அதிலிருந்த பயணிகளிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது ரித்திகா மற்றும் அல்தாப் முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளனர், இதனை சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவமனையில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
ஒரு கட்டத்திற்கு மேல் சமாளிக்க முடியாத ரித்திகா மற்றும் அல்தாப் நடந்த சம்பவங்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் ரித்திகா மற்றும் அல்தாப் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். ஓடும் பேருந்தில் இருந்து பச்சிளம் குழந்தை தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.