
மயிலாடுதுறை மாவட்டம், தலைஞாயிறு கிராமத்தைச் சேர்ந்தவர் மணவாளன். இவர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது ஒரே மகன் சரத்குமார், கடந்த சில ஆண்டுகளாக குவைத் நாட்டில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். சரத்குமார் வைத்தீஸ்வரன் கோயில் அருகே திருப்பன்கூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் மகள் சங்கீதாவை கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இவர்களது காதலை ஏற்றுக்கொண்டனர்.
எனவே தனது காதலியான சங்கீதாவிற்கு சரத்குமார் குவைத்தில் வேலை செய்து அவ்வப்போது ரொக்க பணம் மற்றும் 15 சவரன் வரை நகை அளித்துள்ளார். இதுவரை இரண்டு லட்ச ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கீதாவின் இருசக்கர வாகனம் தொலைந்த நிலையில் இது குறித்து புகார் அளிப்பதற்காக வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையத்திற்கு சங்கீதா சென்றுள்ளார். அப்போது உதவி ஆய்வாளர் வேலை பார்த்து வந்த சூரியமூர்த்தி என்பவருடன் சங்கீதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இந்த பழக்கமானது காதலாக மாறி இருவரும் நெருக்கமாக இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சங்கீதாவும் உதவி ஆய்வாளர் சூரிய மூர்த்தியும் வெளிநாட்டில் உள்ள சரத்குமாருக்கு வீடியோ கால் செய்து நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம். எங்கள் விஷயத்தில் தலையிடாதே என்று கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் உதவி ஆய்வாளர் சூரியமூர்த்தி சரத்குமாரை மிரட்டியதாக தெரிகிறது. இதனால் கவலையடைந்த சூர்யா தனது காதலி சங்கீதாவிடம் தன்னை விட்டு செல்லாதே என கெஞ்சி “நீ போன நான் உயிரோடவே இருக்க மாட்டேன்” என கூறியுள்ளார்.
தொடர்ந்து (ஆக 31) இரவு சரத்குமார் அவரது குடும்பத்தினருக்கு தொலைபேசியில் போன் செய்து தன்னை சங்கீதா ஏமாற்றி விட்டதாகவும் தான் உயிர் வாழ விரும்பவில்லை என்று கூறிவிட்டு செல்போனை வைத்துள்ளார். இதனால் பயந்த குடும்பத்தினர் அவரது போனுக்கு அடுத்தடுத்து போன் செய்துள்ளனர். தொடர்ந்து அவர் செல்போனை எடுக்காமல் இருக்கவே குவைத்தில் உள்ள சரத்குமாரின் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
எனவே சரத்குமார் தங்கியிருந்த அறைக்கு சென்று அவரது நண்பர்கள் பார்த்த பொழுது அவர் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சரத்குமாரின் தாய் தந்தை மற்றும் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை புரிந்து, வைத்தீஸ்வரன் கோயில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சூர்யமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தனர். மேலும் உயிரிழந்த சரத்குமாரின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.