
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியை சேர்ந்தவர் 32 வயதான மணிமாறன். இவர் காரைக்கால் பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்து வந்துள்ளார். நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலின் மாவட்ட நிர்வாகிகள் விருப்ப மனு தாக்கல் கூட்டம் காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மணிமாறன் நிகழ்ச்சி முடிந்ததும் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது மணிமாறனின் காரை பின் தொடர்ந்து வந்த இரண்டு கார்கள் சரியாக தரங்கம்பாடி மெயின் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே மணிமாறனின் கார் சென்ற போது காரை வழிமறித்து உள்ளனர். பின்னர் இரண்டு கார்களில் இருந்து இறங்கிய மர்ம கும்பல் மணிமாறனின் கார் கண்ணாடிகளை உடைத்து வலுக்கட்டாயமாக மணிமாறனை வெளியே இழுத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மணிமாறனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த போலீசார் மணிமாறனை கொலை செய்தவர்களை ஐந்து தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும், முதற்கட்ட விசாரணையில் கடந்த 2021 ஆம் ஆண்டு காரைக்கால் மாவட்ட செயலாளராக இருந்த பாமக நிறுவனர் தேவமணி கொலை செய்யப்பட்ட வழக்கில் மணிமாறன் முதல்நிலை குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது.
தனது தம்பியின் கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும். மணிமாறனின் கொலையில் சிலர் மீது சந்தேகம் உள்ளது எனவும் அவரது அண்ணன் காளிதாசன் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதில் காரைக்கால் பகுதியை சேர்ந்த தேவமணியின் மகன்கள் பிரபாகரன், அருள் குமார், தேவமணியின் மைத்துனர் ராமமூர்த்தி மற்றும் புருசோத்தமன், முட்டை முருகன் என்ற ஐந்து பேர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் போலீசார் மணிமாறன் பழிக்கு பழி வாங்கும் நோக்கத்தில் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.