

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் நவலை கிராமத்தில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக, அவரது கணவர் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவலை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சொர்ணலதா என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். குடும்பத்துடன் நவலை கிராமத்தில் வசித்து வந்த நிலையில் மகேந்திரன் கடந்த ஒரு வருடமாக கோவையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். எனவே சொர்ணலதா தனது மகள் மற்றும் மகனுடன் தனியாக வசித்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த வரதம்மாள் என்பவரின் மகனான 32 வயதுடைய வசந்த் சொர்ணலதா தனியாக இருப்பதை பயன்படுத்தி கடந்த சில மாதங்களாக அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இரவு நேரங்களில் வீட்டு கதவை தட்டுவது, அத்துமீறி நுழைய முயற்சிப்பது சாலைகளில் பார்க்கும் போது பாலியல் சைகைகளை காட்டுவது என தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். வழக்கம் போல கடந்த மாதம் வசந்த் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த போது, சொர்ணலதா மிளகாய் பொடி தூவி, கத்தியை காட்டி விரட்டியுள்ளார்.
தினந்தோறும் கணவரிடம் போன் பேசும் போது வசந்த தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவது தனக்கு மன உளைச்சலாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். இதற்கிடையே கடந்த 29-ம் தேதி மாலை 4.30 மணியளவில் சொர்ணலதா வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக உறவினர்கள் கோவையில் இருந்த மகேந்திரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். எனவே உடனடியாக ஊருக்கு சென்ற மகேந்திரன் மனைவியின் மரணத்தில் வசந்த்துக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதாக புகார் அளித்திருக்கிறார். எனவே, இது குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக சொர்ணலதாவின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்த நிலையில் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். மேலும் சொர்ணலதா பயன்படுத்திய மொபைல் போன் கைப்பற்றி ஆய்வு செய்து வரும் நிலையில் அடுத்த கட்டமாக குற்றம் சாட்டப்பட்ட வசந்தை கைது செய்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குழந்தைகளுடன் வீட்டில் தனியாக வசித்து வந்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.